Saturday, 24 November 2018

சிலாங்கூர் மாநிலத்தில் 48 இந்திய கிராமத் தலைவர்கள் நியமனம்


ரா.தங்கமணி

ஷா ஆலம்-
சிலாங்கூர் மாநிலத்தின் இந்திய கிராமத் தலைவர்கள் இன்று நியமனம் செய்யப்பட்டனர்.

சிலாங்கூர் மாநில மக்களுக்கு நலத் திட்டங்களை வழங்கிடும் வகையில் கிராமத் தலைவர்களின் நியமனம் அமைந்துள்ளது என்று மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் வீ.கணபதிராவ் குறிப்பிட்டார்.

மலேசியாவில் அதிகமான இந்திய கிராமத் தலைவர்கள் நியமிப்பதில் சிலாங்கூர் முன்னிலை வகிக்கிறது. அதன் அடிப்படையில் இன்று 48 இந்திய கிராமத் தலைவர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

அரசாங்கத்திற்கும் மக்களுக்கும் ஓர் உறவுப்பாலமாக  கிராமத் தலைவர்கள் திகழ்கின்றனர். அவ்வகையில் ஒவ்வொரு தொகுதியிலும் நிலவும் மக்கள் பிரச்சினைகளை அங்குள்ள மக்கள் பிரதிநிதிகள், மாவட்ட அலுவலகம் கவனத்திற்குக் கொண்டுச் சென்று தீர்ப்பதில் கிராமத் தலைவர்கள் செயல்படுவார்கள்.

இன்றைய நியமனத்தில் பிகேஆர் கட்சியை சேர்ந்த  24 பேர், ஜசெவைச் சேர்ந்த 18 பேர், அமானா கட்சியைச் சேர்ந்த 5 பேர்,  பெர்சத்து கட்சியைச் சேர்ந்த ஒருவர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் கட்சியை சேர்ந்தவர்களாக இருந்தாலும் ஆளும் மாநில அரசாங்கத்தால் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

பக்காத்தான் ஆட்சியில் இந்தியர்களின் குரல்வளை நெறிக்கப்பட்டுள்ளதாக
சிலர் குற்றஞ்சாட்டுகின்றனர். மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பதில் இவர்கள் அரசாங்கத்தின் பிரதிநிதியாக செயல்படுகின்றனர். இடைத் தரகர்களாக யாரும் இங்கு செயல்படுவது கிடையாது.
ஆனால், கடந்த தேசிய முன்னணி ஆட்சியில் மஇகா, ஐபிஎப், மக்கள் சக்தி போன்ற கட்சிகள் இடைதரகர்களாக மட்டுமே செயல்பட்டுக் கொண்டிருந்தன என்று அவர் குற்றஞ்சாட்டினார்.

பக்காத்தான் ஹராப்பான் ஆட்சியில் மக்கள் நலத் திட்டங்களை மேற்கொள்வதற்கு ஏதுவாக கிராமத் தலைவர்களுக்கு 500 வெள்ளியிலிருந்து 700 வெள்ளியாக அலவன்ஸ் உயர்த்தப்பட்டுள்ளது. அதோடு வருடாந்திர மானியமாக 10,000 வெள்ளி வழங்ககப்படுகிறது. இதன் மூலம் மக்களுக்கு அவர்கள் சிறந்த சேவையை வழங்க முடியும்.

அலவன்ஸ் உயர்வு கோரிக்கையை ஏற்றுக் கொண்டு அமல்படுத்திய மாநில மந்திரி பெசார் அமிருடின் சாரிக்கு நன்றி கூறிக் கொள்ளும் வேளையில் புதிதாக நியமனம் செய்யப்பட்டுள்ள கிராமத் தலைவர்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்வதாக கணபதிராவ் சொன்னார்.

No comments:

Post a Comment