Friday, 12 October 2018

மஇகா தேர்தலில் பணமும் சாதியும் தலைதூக்கக்கூடாது- டான்ஶ்ரீ விக்னேஸ்வரன்


ரா.தங்கமணி, படங்கள்: கினேஷ் ஜி

கோலாலம்பூர்-
மஇகாவில் நடைபெறவுள்ள உயர்மட்ட பதவிகளுக்கான தேர்தலில் பணமும் சாதியும் தலைதூக்கக்கூடாது என்று அக்கட்சியின் தேசியத் தலைவர் டான்ஶ்ரீ எஸ்.ஏ.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

முந்தைய காலங்களில் மஇகாவில் தலைதூக்கிய பண பட்டுவாடாவும் சாதி பேதமும் தற்போது நடைபெறவுள்ள கட்சித் தேர்தலில் தலைதூக்கக்கூடாது. இவ்விரு நடவடிக்கைகளில் ஈடுபடுபவர் யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுக்க ஒருபோதும் தயங்க மாட்டேன்.

கட்சியின் துணைத் தலைவர், உதவித் தலைவர்கள், மத்திய செயலவை உறுப்பினர்கள் ஆகிய பதவிகளுக்கு வேட்புமனுத் தாக்கல் நடைபெற்று முடிந்துள்ளது.

கட்சித் தேர்தலில் போட்டியிடக்கூடியவர்கள் பணப் பட்டுவாடா செய்வது கன்டறியப்பட்டால் தக்க நடவடிக்கை எடுக்கப்படும். அதே போன்றுதான் சாதி பேதமும் இங்கு தலைதூக்கக்கூடாது. கட்சியின் இந்த கோட்பாட்டை வேட்பாளர்கள் மீறக்கூடாது என நேற்று நடைபெற்ற வேட்புமனுத் தாக்கலுக்குப் பின்னர் உரையாற்றுகையில் அவர் இவ்வாறு சொன்னார்.

அதோடு, தற்போது மஇகா எதிர்க்கட்சியாக திகழ்கின்ற போதிலும் கட்சித் தேர்தலில் இத்தனை பேர் போட்டியிட முன்வந்துள்ளது கட்சியின் பலத்தையே காட்டுகிறது. ஆளும் அரசாங்கத்தில் நாம் இல்லையென்றாலும் கட்சி மீதான உறுப்பினர்களின் நம்பிக்கை இன்னமும் வீண் போகவில்லை.

துணைத் தலைவர் பதவிக்கு முன்னாள் துணையமைச்சர் டத்தோஶ்ரீ எம்.சரவணனும் தொழிலதிபர் டான்ஶ்ரீ எம்.ராமசாமியும் போட்டியிட முன்வந்துள்ளனர். தற்போதைய சூழலிலும் கட்சியின் நலன் கருதி துணைத் தலைவர் பதவிக்கு போட்டி நிலவுவது ஆக்கப்பூர்வமானதாகும். இது கட்சி இன்னமும் வலுவாக இருப்பதையே காட்டுகிறது.

மேலும், 3 உதவித் தலைவர் பதவிக்கு 10 பேரும் 21 மத்திய செயலவை உறுப்பினர் பதவிக்கு 44 பேரும் போட்டியிட முனைந்துள்ளது கட்சி உறுப்பினர்களின் தீராத பற்றை புலப்படுத்துகிறது.

கட்சி மீது பற்றுக் கொண்ட உறுப்பினர்கள் உள்ள வரை மஇகாவுக்கு ஒருபோதும் அழிவே இல்லை என்று மேலவை சபாநாயகருமான டான்ஶ்ரீ விக்னேஸ்வரன் குறிப்பிட்டார்.

No comments:

Post a Comment