Tuesday, 25 September 2018

அடுத்த மாதம் தொடங்குகிறது ரஜினி மக்கள் மன்ற ஆலோசனை கூட்டம்

சென்னை-

நடிகர் ரஜினிகாந்த் கடந்த டிசம்பர் மாதம் 31ஆம் தேதி அரசியலுக்கு வரப்போவதாக அறிவிப்பை வெளியிட்டார். இதையடுத்து தமிழகம் முழுவதும் உள்ள ரஜினி ரசிகர் மன்றங்கள் ரஜினி மக்கள் மன்றமாக மாற்றம் செய்யப்பட்டன.

இதையடுத்து ரஜினி மக்கள் மன்றத்துக்கு உறுப்பினர்கள் சேர்க்கும் பணி தொடங்கி தீவிரமாக நடந்து வருகிறது. அவர்களுக்கு உடனடியாக உறுப்பினர் அடையாள அட்டைகளும் வழங்கப்பட்டன.

அதன் பிறகு மாவட்டம் தோறும் ரஜினி மக்கள் மன்றத்துக்கு நிர்வாகிகள் நியமனம் செய்யப்பட்டனர். இளைஞர் அணி, மகளிர் அணி உள்ளிட்ட பல்வேறு அணி நிர்வாகிகள் நியமனம் செய்யப்பட்டனர்.

பின்னர் கடந்த ஜூலை மாதம் மாவட்டந்தோறும் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அந்த ஆலோசனை கூட்டத்தில் உறுப்பினர் சேர்க்கையை தீவிரப்படுத்துவது பற்றி ஆலோசிக்கப்பட்டது.

இதற்காக உள்ளூரில் உள்ள முக்கிய பிரச்சினைகள் பற்றியும் ரஜினி மக்கள் மன்றத்தினர் மாவட்டம் வாரியாக ஆய்வு செய்தனர்.

ரஜினி மக்கள் மன்றம் சார்பில் மாவட்டம் வாரியாக ஆலோசனை கூட்டம் நடைபெற இருப்பதாக மாநில அமைப்பு செயலாளர் இளவரசன் தெரிவித்துள்ளார். இது தொடர்பான ஆலோசனை கூட்டம் அக்டோபர் 5ஆம் தேதி,  11ஆம் தேதிகளில் தலைமை அலுவலகத்தில் நடக்கிறது.

ரஜினி அரசியல் அறிவிப்பை வெளியிட்டு 9 மாதங்கள் ஆன நிலையில் அரசியல் கட்சி தொடங்குவதற்கான அனைத்து பணிகளும் கிட்டத்தட்ட முடியும் தருவாயில் உள்ளன.

எனவே அவர் விரைவில் அரசியல் கட்சி தொடங்கலாம் என்ற எதிர்பார்ப்பு நிலவுவதாக ரஜினி மக்கள் மன்ற வட்டாரத்தில் தகவல் பரவி வருகிறது.

No comments:

Post a Comment