Friday, 21 September 2018

ஏவுகணை சோதனை மையத்தை மூட வடகொரியா அதிரடி முடிவு

சியோல்-
ஏவுகணை சோதனை மையத்தை மூட வடகொரியா முடிவு செய்துள்ளதாக தென்கொரிய அதிபர் மூன் ஜே இன் தெரிவித்தார்.வடகொரியா, தென் கொரியா இடையே நட்புறவு மலர ஆரம்பித்துள்ளது. கடந்த ஏப்ரல், மே மாதங்களில் வடகொரிய தலைவர் கிம் ஜாங் உன்னும், தென் கொரிய அதிபர் மூன் ஜே இன்னும் இரு நாட்டு எல்லையில் உள்ள  பன்மூன்ஜோம் கிராமத்தில் சந்தித்து பேசினர். அதை தொடர்ந்து, அமெரிக்க  அதிபர்  டிரம்பும், வடகொரிய தலைவர் கிம் ஜாங் உன்னும் கடந்த ஜூன் மாதம் சிங்கப்பூரில் உச்சி மாநாடு நடத்தி சந்தித்துப் பேசினர்.

இந்நிலையில், வடகொரிய தலைவர் கிம் ஜாங் உன்னுடன்  ஏற்கெனவே 2 முறை பேச்சு வார்த்தை நடத்தி  உள்ள நிலையில், 3வது சுற்று பேச்சுவார்த்தை நடத்துவதற்காக தென்கொரிய அதிபர் மூன் ஜே இன், மனைவி  கிம் ஜங் சூக்குடன் பியாங்யாங் நகருக்கு 3 நாள் பயணமாக சென்றார்.  வடகொரியா சென்ற மூன் ஜே இன்னுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. இதையடுத்து பியாங்யாங் நகரில், இரு தலைவர்களும் பேச்சு வார்த்தை நடத்தினர்.

அப்போது, கொரியா மக்கள் எப்போது வேண்டுமானாலும்  குடும்பத்தை சந்திக்க அனுமதி அளிப்பது, சாலை, ரயில் போக்குவரத்து ஆகிய பணிகளை இணைந்து மேற்கொள்வது, 2032 ஒலிம்பிக் போட்டியை இணைந்து நடத்துவது என்ற முடிவு எடுக்கப்பட்டது. அதன்பின் இரு தலைவர்களும்   கூட்டறிக்கை வெளியிட்டு, நிருபர்களை கூட்டாக சந்தித்தனர். அப்போது, தென்கொரிய அதிபர் மூன் ஜே இன் கூறியதாவது: டாங்சாங் ரியில் உள்ள ஏவுகணை என்ஜின் சோதனை தளம் மற்றும் ஏவுதளம் ஆகியவற்றை நிரந்தரமாக அழிக்க வடகொரியா ஒப்புக்கொண்டு உள்ளது.

அமெரிக்கா உறுதியான நடவடிக்கைகளோடு வரும் பட்சத்தில், நியோங்பியோனில் உள்ள பிரதான அணு உலை கூடத்தை அழிக்க தயாராக இருப்பதாகவும் வடகொரியா தெரிவித்துள்ளது. அமைத்துலக பார்வையாளர்கள் முன் இதை  செய்ய வடகொரியா தயாராக உள்ளது. இவ்வாறு கூறினார்.வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன் கூறுகையில்,’ நாங்கள் செய்த ஒப்பந்தம் மூலம் மக்கள் புதிய நம்பிக்கை பெற்றுள்ளனர். கொரிய மக்கள் ஒன்றிணைந்து செயல்பட இது நல்ல வாய்ப்பு’ என்றார்.

No comments:

Post a Comment