Thursday, 20 September 2018

மலிவு விலை மதுபானத்தை துடைத்தொழிக்க சட்டங்களை கடுமையாக்குக- கணபதிராவ்

ரா.தங்கமணி

ஷா ஆலம், செப்.20-
மலிவு விலை மதுபானத்தினால் நிகழும் மரணச் சம்பவங்களை அரசாங்கம் கடுமையாக கருதுவதோடு அதனை தடுக்க ஆக்ககரமான திட்டங்களை முன்னெடுக்க வேண்டும் என சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் வீ.கணபதிராவ் வலியுறுத்தினார்.

உயிருக்கு ஆபத்தான மதுபானத்திலேயே போலித்தனமான, தரம் குறைந்த மதுபானங்கள் தயாரிக்கப்படுகின்றன. சிலர் போலியான மதுபானங்களை இறக்குமதி செய்வதோடு இன்னும் சிலர் மதுபானங்களை சொந்தமாக தயாரிக்கின்றனர்.

மலிவு விலை மதுபானங்களுக்கு எதிராக பினாங்கில் மிகப் பெரிய போராட்டம் மேற்கொள்ளப்பட்டது. இதில் சட்டமன்ற உறுப்பினர் சதீஸ், கவுன்சிலர் டேவிட் மார்ஷல் ஆகியோரின் பங்கு அளப்பரியது.

ஆனால் போராட்டங்களை முன்னெடுத்த போதிலும் இன்னமும் மலிவு விலை மதுபானங்களை துடைத் தொழிக்க முடியவில்லை என்பதையே நேற்று முன்தினம் விஷ மதுவினால் 19 மரணமடைந்துள்ள சம்பவம் காட்டுகிறது.

மலிவு விலை மதுபானங்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுப்பட வேண்டியது அவசியமாகிறது என கூறிய கணபதிராவ்,  மலிவு விலை மதுபானங்களை விற்பனை செய்யும் கடைகளின் உரிமங்கள் ரத்து செய்யப்பட வேண்டும் என்றார்.

இதனை துடைத்தொழிக்கும் மிகப் பெரிய பங்கு சுங்கத்துறை இலாகாவிடம் உள்ளது. ஆனால் மாநகர் மன்றம், போலீஸ் என பிறரை கை காட்டாமல் இதனை துடைத்தொழிக்க கடுமையான அணுகுமுறையை சுங்கத்துறை இலாகா மேற்கொள்ள வேண்டும்.

அதோடு, மலிவு விலை விற்பனை செய்யும் வணிகங்களின் உரிமத்தை சம்பந்தப்பட்ட மாநகர் மன்றம் மீட்டுக் கொள்ள வேண்டும்.

சட்டங்கள் கடுமையாக இருந்தால்தான் குற்றங்களை குறைக்க முடியும் என்ற நிலையில் பல உயிர்களை காக்க கடுமையான அணுகுமுறையை கடைபிடிப்பது ஒருபோதும் தவறாகாது என கணபதிராவ் மேலும் சொன்னார்.

நேற்று முன்தினம் விஷ மதுபானத்தை அருந்திய 48 பேரில் 19 பேர் பலியானதோடு 29 பேர் தீவிர கண்காணிப்பில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

No comments:

Post a Comment