Wednesday 12 September 2018

மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தலாம்- டிரம்புக்கு கிம் ஜாங் உன் கடிதம்


வாஷிங்டன்-
உலக நாடுகளின் எதிர்ப்புகளையும் மீறி வடகொரியா பலமுறை அணு குண்டுகளையும், கண்டம் விட்டு கண்டம் பாயும் பல ஏவுகணைகளையும் பரிசோதித்ததால் அமெரிக்காவின் கோபத்திற்கு ஆளாகி பொருளாதார தடைகளை சந்தித்தது.

தொடர்ந்து அமெரிக்க அதிபர் டிரம்பும் வடகொரிய தலைவர் கிம் ஜாங் உன்னும் வார்த்தை போரில் ஈடுபட்டனர். இதனால் இரண்டு நாடுகளுக்கும் இடையே போர் மூளும் அபாயம் ஏற்பட்டது.

இதைத்தொடர்ந்து, தென்கொரியாவின் முயற்சியினால் அமெரிக்கா,  வடகொரியா தலைவர்களின் அமைதி பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்யப்பட்டு சிங்கப்பூரில் கடந்த ஜூன் மாதம் வரலாற்று சிறப்பு மிக்க சந்திப்பு நடைபெற்றது. அதில், அணு ஆயுதங்களை முற்றிலுமாக அழித்து விடுவதாக அறிவித்த கிம் ஜாங் உன் பிறகு அதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார்.

எனினும், அணு ஆயுத ஒழிப்பில் வடகொரியா மெத்தனம் காட்டுவதாக அமெரிக்கா குற்றம்சாட்டியது. இதற்கிடையே கடந்த 5ஆம் தேதி கிம் ஜாங் உன்னை தென் கொரியாவைச் சேர்ந்த உயர் நிலைக்குழு சந்தித்து பேசியது.
அப்போது, அமெரிக்கா அதிபர் மீது தான் நம்பிக்கை வைத்துள்ளதாகவும், அவரது ஆட்சிக் காலத்துக்குள் அணு ஆயுத ஒழிப்பு முழுமை பெறும் எனவும் கிம் ஜாங் உன் கூறியதாக தெரிகிறது.

மேலும், நேற்று நடைபெற்ற வடகொரியாவின் 70ஆவது ஆண்டு விழாவில் கண்டம் விட்டு கண்டம் சென்று தாக்கும் ஏவுகனைகள், அணு ஆயுதங்கள் இல்லாமல் ராணுவ அணிவகுப்பை கிம் ஜாங் உன் நடத்தி முடித்தார்.

அவரது இந்த நடவடிக்கையை பாராட்டி டிரம்ப் நன்றி தெரிவித்தார். மேலும், நாம் இருவருக்கும் இடையே மோதல் நடக்கும் என நினைப்பவர்களின் எண்ணங்கள் தவறானது என நாம் இருவரும் சேர்ந்து நிரூபிப்போம் எனவும் தெரிவித்திருந்தார். இதனால் இருவருக்கும் இடையேயான உறவில் நேர்மறையான முன்னேற்றம் ஏற்பட்டது.

இந்நிலையில், டிரம்பிற்கு கிம் ஜாங் உன் கடிதம் எழுதியுள்ள தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக வெள்ளை மாளிகை செய்தி தொடர்பாளர் சாரா சாண்டர்ஸ் குறிப்பிட்டுள்ளதாவது :-

கிம் ஜாங் உன் அதிபர் டிரம்பிற்கு கடிதம் எழுதியுள்ளார். மிகவும் நல்ல விஷயங்களை உள்ளடக்கிய நேர்மறையான கடிதமாக அமைந்துள்ளது. கொரிய தீபகற்பத்தில் அணு ஆயுதங்களை அழிக்கும் நடவடிகைகளில் தொடர்ந்து கவணம் செலுத்தி வருவதாக கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அந்த கடிதத்தின் பிரதான நோக்கம் அதிபருடன் மீண்டும் சந்திப்பை திட்டமிடுவதே ஆகும், இந்த சந்திப்பை ஒருங்கிணைக்கும் வேலைகளில் ஏற்கெனவே நாங்கள் ஈடுபட தொடங்கிவிட்டோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

No comments:

Post a Comment