Wednesday, 12 September 2018

அமெரிக்க இரட்டை கோபுரம் தகர்ப்பு; 17ஆவது நினைவு தினம் அனுசரிப்பு


வாஷிங்டன், செப்.12-
அமெரிக்காவுக்குச் சொந்தமான நான்கு விமானங்களை கடத்திய அல் கய்டா பயங்கரவாதிகள் 19 பேர், 2001, செப். 11ம் தேதி, உலக வர்த்தக மைய இரட்டை கோபுரத்தின் மீது மோத செய்தனர். மோதிய 2 மணி நேரத்துக்குள் மொத்த கட்டடமும் தரை மட்டமானது.

இரண்டு விமானங்களில் இருந்த பயணிகள் 147 பேரும், வணிக மைய கட்டடத்தில் இருந்த 2,606 பேரும் பலியாகினர்.

மூன்றாவது விமானத்தை எர்லிங்டன் என்ற இடத்தில் ராணுவ தலைமையகமான பென்டகன் மீது மோதச் செய்தனர். இதில் விமானத்தில் இருந்த 59 பேரும், பென்டகனில் இருந்த 125 ராணுவ வீரர்களும் பலியாகினர்.

கடத்தப்பட்ட நான்காவது விமானத்தில் பயணிகள் - பயங்கரவாதிகள் இடையே சண்டை நடந்தது. முடிவில் சாங்ஸ்வில் என்ற இடத்தில் விபத்துக்குள்ளாகி தீப்பற்றி எரிந்து சாம்பலானது. இதில் 40 பேர் பலியாகினர்.

இச்சம்பவம் அமெரிக்காவை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. உருக்குலைந்த இரட்டை கோபுர இடிபாடுகள் 2002 மே மாதம் முற்றிலும் அகற்றப்பட்டது.
தாக்குதலுக்கு ஒசாமா பின்லேடனின் அல்கய்டா பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றது. இதையடுத்து 'பயங்கரவாதிகள் மீது போர்' என்ற பெயரில் ஆப்கனில் பதுக்கியிருந்த ஒசாமா, அல்கய்டா பயங்கரவாதிகள் மீது தாக்குதலை தொடங்கியது. 'நேட்டோ' படைகளும் களத்தில் இறங்கின.

ஒன்பது ஆண்டுகள் தீவிர தேடுதல் வேட்டையில், 2011 மே 2இல், ஒசாமா பின் லேடன் பாகிஸ்தானின் அபோதாபாத் நகரில் உள்ள பங்களாவில் சுட்டுக்கொல்லப்பட்டார். இந்த தாக்குதலுக்காக அமெரிக்கா பல ஆயிரம் கோடி ரூபாயை செலவிட்டது. 2001 தாக்குதலுக்கு பின், அமெரிக்காவில் எந்தவொரு பயங்கரவாத தாக்குதலும் நடைபெறவில்லை.

தாக்குதல் நடந்த அன்று பேசிய நியூயார்க் கவர்னர் ஜார்ஜ், 'அரசியல், பொருளாதாரத்தில் நாங்கள் முன்பை விட பலமடங்கு வேகத்தில் மீண்டு வருவோம்' என்றார்.

அதன்படி சேதமடைந்த பென்டகன் ராணுவ தலைமையகம் ஓராண்டுக்குள் சரி செய்யப்பட்டது. அதே போல இரட்டை கோபுரம் இருந்த இடத்தில் நினைவிடம், மியூசியம் அமைக்கப்பட்டுள்ளது. அப்பகுதியில் இரண்டு உலக வர்த்தக மைய கோபுரமும் கட்டி திறக்கப்பட்டுள்ளது.

தாக்குதல் நடந்து 17 ஆண்டுகள் கடந்தும், பலியானவர்களில் 1,100 பேரின் அடையாளம் இன்னும் கண்டுபிடிக்கப்படாமல் உள்ளது. நியூயார்க் ஆய்வகத்தில் வைக்கப்பட்டுள்ள உடல்கள், ஏற்கனவே 10 - 15 முறை டி.என்.ஏ. சோதனை நடத்தப்பட்டு விட்டது.

No comments:

Post a Comment