ரா.தங்கமணி
ஈப்போ-
தமிழ்ப்பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கையும் கல்வித் தரமும் உயர்த்தப்பட தமிழ்ப்பள்ளிகள் மீதான உணர்விலிருந்து (Sentiment) விடுபட வேண்டும் என்று பேராக் மாநில தமிழ்ப்பள்ளி கல்வி, மேம்பாட்டு கருத்தரங்கின் ஏற்பாட்டுக் குழுத் தலைவர் குணசேகரன் தெரிவித்தார்.
தமிழ்ப்பள்ளிகள் மீதான அதீத ஈர்ப்பினால் இன்று பல பள்ளிகள் முன்னேற்றமும் மேம்பாடும் காணாத நிலையில் எதிர்காலச் சூழலை கேள்விக்குறியாக்கிக் கொண்டுள்ளது.
இன்று பேரா மாநிலத்திலுள்ள 134 தமிழ்ப்பள்ளிகளில் 70 விழுக்காடு தமிழ்ப்பள்ளிகள் குறைந்த மாணவர்களைக் கொண்ட பள்ளியாக உள்ளன.
ஆனால் இப்பள்ளிகளை இடமாற்றம் செய்ய வேண்டும் என்ற நடவடிக்கையை முன்னெடுத்தால் சில தரப்பினர் (பெற்றோர் உட்பட) அதற்கு முட்டுக்கட்டையாக திகழ்வதோடு இப்பள்ளி எங்கள் உணர்வோடு கலந்தது; அதனை வேறு இடத்திற்கு மாற்ற அனுமதிக்க மாட்டோம் என்ற விவாதத்தையும் கிளப்புகின்றனர்.
முன்பு தோட்டப் புறங்களில் அதிகமான இந்தியர்கள் வாழ்ந்தனர். அதன் அடிப்படையில் தோட்டப்புறங்களில் தமிழ்ப்பள்ளிகள் உருவாக்கப்பட்டன.
சில காலத்திற்கு பின்னர் தோட்டப்புறத்திலிருந்து நகர்புறத்திற்கு இந்தியர்கள் இடம்பெயர்ந்தபோது தோட்டப்புற தமிழ்ப்பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கை சரிவு கண்டது.
இன்று நாட்டில் 80,000 மாணவர்கள் தமிழ்ப்பள்ளியில் பயில்கின்றனர். இன்னும் 45 விழுக்காடு இந்திய மாணவர்கள் பிற மொழி பள்ளிகளில் பயில்கின்றனர். இதற்கு காரணம் தோட்டப்புறத்திலிருந்து இடம்பெயர்ந்த இந்தியர்கள் பட்டணத்திலுள்ள பிற மொழி பள்ளிகளில் தங்களது பிள்ளையை சேர்க்கின்றனர்.
அதோடு, அறிவியல், தொழில் நுட்பத் துறையில் மேம்பாடு காணாத சூழலும் இந்திய பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளை வேறு பள்ளிகளுக்கு அனுப்புகின்றனர்.
குறைந்த மாணவர்களால் ஆபத்தை எதிர்கொண்டுள்ள தமிழ்ப்பள்ளிகளை மீட்டெடுக்க அப்பள்ளிகளை இந்தியர்கள் அதிகம் உள்ள இடங்களுக்கு இடமாற்றம் செய்ய அனைத்துத் தரப்பினரும் முன்வர வேண்டும்.
இன்னும் உணர்வுபூர்வமான விவகாரங்களை கையாண்டு தமிழ்ப்பள்ளிகளில் எதிர்காலச் சூழலை கேள்விக்குறியாக்க வேண்டாம் என்று அவர் மேலும் சொன்னார்.
No comments:
Post a Comment