Thursday 23 August 2018

தேமு ஆட்சியில் இந்திய சமுதாயத்திற்கு எவ்வித பயனும் இல்லை- வேதமூர்த்தி குற்றச்சாட்டு

ரா.தங்கமணி

கோலாலம்பூர்-
கடந்த தேசிய முன்னணி ஆட்சியின்போது இந்திய சமூதாயத்திற்காக பல திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டதாக கூறப்பட்டாலும் இந்திய சமுதாயம் எவ்வித பயனையும் அடையவில்லை என சமூக, ஒற்றுமை துறை அமைச்சர் பொ.வேதமூர்த்தி குற்றஞ்சாட்டினார்.

60 ஆண்டுகளாக ஆட்சி புரிந்த தேசிய முன்னணி அரசாங்கத்தின் கீழ் இந்திய சமுதாயம் எவ்வித மேம்பாட்டையும் காணவில்லை. இந்திய சமுதாயத்திற்காக பல திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டாலும் அவை முறையாக இந்திய சமுதாயத்தைச் சென்றடையாததே இந்த தோல்விக்கு காரணம் என்று அவர் சொன்னார்.

இந்திய சமுதாயத்திற்காக தேமு அரசாங்கம் அறிமுகப்படுத்திய 'செடிக்' திட்டம் அதில் ஒன்றாகும். ஆனால் அந்த அமைப்பின் மூலம் இந்திய சமுதாயம் முன்னேற்றம் கண்டது என சொல்ல முடியாது. பல அரசு சார்பற்ற இயக்கங்களுக்கு மானியங்கள் வழங்கப்பட்ட போதிலும் அது முறையாக இந்திய சமுதாயத்தைச் சென்றடையவில்லை என்றே சொல்லலாம்.

'செடிக்' அமைப்பின் மூலம் வழங்கப்பட்ட மானியங்களை சில பொது இயக்கங்கள் முறையாக பயன்படுத்திய போதிலும் சில இயக்கங்கள் தவறாக பயன்படுத்தியுள்ளன. இதனால் இந்திய சமுதாயத்திற்கு எவ்வித நன்மையும் ஏற்படவில்லை.

இந்திய மேம்பாட்டிற்காக தேமு அரசாங்கம் கொண்டி வந்த திட்டங்கள் நம் சமுதாயத்தில் எவ்வித முன்னேற்றத்தையும் கொண்டு வரவில்லை என்பதே உண்மையாகும் என இன்று  ஆஸ்ட்ரோ 'விழுதுகள்' நிகழ்ச்சியில் நடத்தப்பட்ட நேர்காணலின்போது செனட்டர் வேதமூர்த்தி தெரிவித்தார்.

இந்த தவறுகள் மீண்டும் அரங்கேறாத வண்ணம் தற்போதைய நம்பிக்கைக் கூட்டணி அரசாங்கத்தில் பல்வேறு திட்டங்கள் வகுக்கப்பட்டு முறையாக நிதி கையாளப்பட்டு இந்திய சமுதாயத்திற்கு பயனான வகையில் மானியம் வழங்கப்படும் என்று அவர் மேலும் சொன்னார்.

No comments:

Post a Comment