ரா.தங்கமணி
ஷா ஆலம்-
ஒருவர் குற்றவாளி என நிரூபிக்கப்படுவதற்கு முன்னர் தண்டனையை அனுபவிப்பதற்கு வழிவகுக்கும் "சோஸ்மா" சட்டத்தை அகற்ற பக்காத்தான் ஹராப்பான் அரசாங்கம் பரிசீலிக்க வேண்டும் என்று சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் வீ.கணபதிராவ் தெரிவித்தார்.
சோஸ்மா சட்டம் அகற்றப்பட வேண்டும் என்று சிறைத் தண்டனை அனுபவிக்கும் கைதிகள் உண்ணாவிரதப் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர் என்ற தகவல் வேதனையளிக்கிறது.
சோஸ்மா சட்டத்தின் மூலம் ஒருவர் குற்றவாளி என உறுதிப்படுத்தப்படும் முன்பே சிறைத் தண்டனையை அனுபவிக்க நேரிடுகிறது.
ஒரு குற்றவாளியை ஒடுக்குவதற்கு ஏற்கெனவே பல குற்றவியல் சட்டங்கள் நடைமுறையில் உள்ளன. அச்சட்டத்தின் மூலம் ஒரு குற்றவாளியை களையெடுக்கலாமே தவிர அதற்கு
'சோஸ்மா' சட்டம் ஆக்கப்பூர்வமாக அமையாது.
குற்றவாளி என உறுதிப்படுத்தும் முன்பே ஒருவரை தண்டிப்பது நியாயமாகாது. அதனை எந்தவொரு ஜனநாயக நாடும் ஏற்காது.
போலீசாரின் கடமையை எளிமையாக்குவதற்கு கடுமையான சட்டங்கள் அமல்படுத்துவது ஏற்புடையதாகாது.
இதேபோன்றுதான் ஹிண்ட்ராஃப் காலத்தின்போது உள்நாட்டு பாதுகாப்பு சட்டத்தின் (இசா) கீழ் தாம் உட்பட ஹிண்ட்ராஃப் போராட்ட வாதிகள் தடுத்து வைக்கப்பட்டோம்.
கிட்டத்தட்ட ஒன்றரை ஆண்டுகள் கமுண்டிங் தடுப்பு காவலில் அடைக்கப்பட்ட எங்கள் மீது தீவிரவாத குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன. இதனால் பல்வேறு இன்னல்களை நாங்கள் எதிர்கொண்டோம்.
அதேபோன்றதொரு நிலையைதான் தற்போது சோஸ்மா சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களும் அவரது குடும்பத்தினரும் எதிர்நோக்கும் பிரச்சினைகளை கருத்தில் கொண்டு "சோஸ்மா" சட்டம் அகற்றப்பட வேண்டும் எனவும் நடைமுறை குற்றவியல் சட்டங்களின் அவர்கள் மீதான குற்றச்சாட்டுகள் விசாரிக்கப்பட வேண்டும் எனவும் குற்றம் இழைக்காதவர்கள் சிறையிலிருந்து விடுபட வேண்டும் எனவும் கணபதி ராவ் வலியுறுத்தினார்.
குற்றங்களை துடைத்தொழிக்கிறோம் என்ற போர்வையில் நாமே (அரசாங்கம்) குற்றம் இழைக்கக்கூடாது என அவர் மேலும் சொன்னார்.
No comments:
Post a Comment