ரா.தங்கமணி
கோலாலம்பூர்-
பக்காத்தான் ஹராப்பான் ஆட்சியில் மக்களுக்கு சிறந்த சேவைகளை வழங்குவதற்கு மட்டுமே முன்னுரிமை வழங்கப்படுமேயொழிய சிபாரிசு கடிதங்களுக்கு அல்ல என்று சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் வீ.கணபதி ராவ் குறிப்பிட்டார்.
குத்தகைகளை பெறுவதற்கும் வியாபார நோக்கத்திற்காகவும் சிபாரிசு கடிதங்கள் வழங்கப்படாது. அதற்கு கடந்த தேசிய முன்னணி ஆட்சியோடு முடிவு கட்டப்பட்டு விட்டது.
ஒரு மறுமலர்ச்சியை ஏற்படுத்த வேண்டும் எனும் நோக்கில் தேசிய முன்னணி அரசாங்கத்தை தூக்கி எறிந்து பக்காத்தான் ஹராப்பானை ஆட்சி பீடத்தில் மக்கள் அமர வைத்துள்ளனர்.
மக்களுக்கு சேவை செய்யவே நாம் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறோம். அவற்றை நாம் சிறப்பாக செய்து காட்ட வேண்டும் என தலைநகர்,சிலாங்கூர் கிளப்பில் நடைபெற்ற கேபிஎன் வர்த்தக சம்மேளனத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்தியத் தலைவர்களுக்கான பாராட்டு விழாவில் உரையாற்றியபோது கணபதி ராவ் இவ்வாறு கூறினார்.
தேர்தலின்போது இந்திய சமுதாயத்திற்காக வழங்கப்பட்ட 25 வாக்குறுதிகளை நிறைவேற்றுவதை பக்காத்தான் அரசாங்கம் மறந்து விடாது. தேசிய முன்னணியின் ஊழல் விவகாரங்களில் கவனம் செலுத்தியிருந்தாலும் கொடுத்த வாக்குறுதிகளை ஒருபோதும் மறந்து விடமாட்டோம் என அவர் சொன்னார்.
இதனிடையே, இப்போது நமக்கு 4 அமைச்சர்களும் ஒரு துணை அமைச்சரும் ஆட்சிக்குழு உறுப்பினர்களும் மாவட்ட மன்ற, நகராண்மைக் கழக உறுப்பினர்களும் அதிகமாக உள்ளனர். அவர்களை பாராட்ட வேண்டியது நமது கடமை எனும் அடிப்படையிலேயே இந்நிகழ்வு நடத்தப்படுவதாக சம்மேளனத்தின் தலைவர் ராஜேந்திரன் ராசப்பன் கூறினார்.
பக்காத்தானின் மலேசியா நிதி திட்டத்திற்கு 20 ஆயிரம் வெள்ளி வழங்கப்பட்டது.
இந்நிகழ்வில் நெகிரி செம்பிலான் மாநில சட்டமன்ற துணை சபாநாயகர் ரவி முனுசாமி, சபாய் சட்டமன்ற உறுப்பினர் திருமதி காமாட்சி, செனட்டர் சந்திரமோகன் உட்பட உள்நாட்டு, வெளிநாட்டு தொழிலதிபர்களும் சம்மேளனப் பொறுப்பாளர்களும் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment