Wednesday, 15 August 2018

எங்கே அந்த 3 லட்சம் பேர்? - டத்தோ சிவராஜ் கேள்வி


கோலாலம்பூர்-
நம்பிக்கைக் கூட்டணி அரசு 3,407 இந்தியர்களுக்கு சிவப்பு நிற அடையாள அட்டைக்கு பதிலாக நிரந்தரக் குடியுரிமை வழங்குவது குறித்து தாம் மிகுந்த மகிழ்ச்சி அடைவதாக கேமரன் மலை நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோ சிவராஜ் சந்திரன் தமது அறிக்கையில் கூறியுள்ளார்.

இந்நிலையில் 3 லட்சம் இந்தியர்களுக்கு குடியுரிமை இல்லை என்ற குற்றச்சாட்டை முன்வைத்தவர்கள், அவர்களை அடையாளம் காண்பார்களா? என்ற கேள்வியையும் அவர் முன்வைத்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், பிரதமர் துன் டாக்டர் மகாதீர், குடியுரிமைக்கு விண்ணப்பம் செய்த 60 வயதை கடந்த 3,407 இந்தியர்களுக்கு குடியுரிமை வழங்க நம்பிக்கைக் கூட்டணி அரசு முன்வந்திருப்பதாகக் கூறியுள்ளார்.

இந்த நடவடிக்கையை முன்னெடுத்ததற்கு நம்பிக்கைக் கூட்டணிக்கு வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன். ஆனால் இந்த இடத்தில் ஒரு உண்மையை நினைவுப்படுத்த விரும்புகிறேன். குடியுரிமையை பெறும் 3,407 பேரையும் மை டஃப்தார் மூலம் தேசிய முன்னணி அரசுதான் அவர்களின் ஆவணங்களை திரட்டியது என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

14ஆவது பொதுத் தேர்தலுக்கு முன்னதாக நம்பிக்கைக் கூட்டணியின் தலைவர்கள் இந்த விவகாரம் தொடர்பில் பல்வேறான சர்ச்சைகளை கிளப்பினார்கள். முன்னதாக ஒற்றுமை மற்றும் சமூக நல்வாழ்வுத் துறை அமைச்சர் செனட்டர் வேதமூர்த்தி, வெளியிட்ட அறிக்கையில் 3 லட்சம் இந்தியர்களுக்கு குடியுரிமை இல்லை என கூறியிருந்தார்.

ஆனால் பொதுத் தேர்தலுக்குப் பிறகு மனிதவள அமைச்சர் குலசேகரன் 30 ஆயிரம் இந்தியர்களுக்குத்தான் குடியுரிமை இல்லை என்கிறார்.

இத்தருணத்தில் குடியுரிமை இல்லாத இந்தியர்களை அடையாளம் கண்டு அவர்களுக்கு நிரந்தரக் குடியுரிமையை வழங்க நம்பிக்கை கூட்டணி அரசு ஆக்ககரமான செயல் திட்டங்களை முன்னெடுக்க வேண்டும்.

குறிப்பாக குடியுரிமை இல்லாமல் இருக்கும் மீதமுள்ள 296,593 இந்தியர்களை அடையாளம் கண்டு அவர்களுக்கு குடியுரிமை வழங்க வேண்டும்.

இந்த வாக்குறுதியை நம்பிக்கை கூட்டணி அரசு ஆட்சி அமைத்தால் 100 நாட்களுக்குள் நிறைவேற்றுவோம் என கூறியிருந்தது என டத்தோ சிவராஜ் சந்திரன் தமது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment