Friday, 6 July 2018

மாணவி வசந்தபிரியாவை விசாரித்தேன்; அடிக்கவில்லை - ஆசிரியர் ரேமளா விளக்கம்

ஜோர்ஜ்டவுன் -
கைப்பேசி தொலைந்து போனது தொடர்பில் மாணவி வசந்தபிரியாவை அடிக்கவும் இல்லை,  திட்டவும் இல்லை என ஆசிரியை ஆர்.ரேமளா நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

இரண்டாம் படிவ மாணவியான வசந்தபிரியா கைப்பேசியை திருடினார் என தாம் குற்றஞ்சாட்டவில்லை. மாறாக ஆசிரியர் அறைக்குள் நுழைந்தாரா? என்று தான் கேட்டேன்.

ஆயினும் ஆசிரியர் அறைக்குள் செல்லவில்லை என வசந்தபிரியா தம்மிடம் கூறியதாகவும் எஸ்.பரமசிவம் என்ற மற்றோர் ஆசிரியர் வசந்தபிரியா ஆசிரியர் அறைக்குள்  நுழைந்ததற்கான ஆதார காணொளியை காண்பித்ததாகவும் பின்னர் வசந்தபிரியா கைப்பேசியை எடுத்ததை ஒப்புக் கொண்டார் எனவும் கைப்பேசியின் உரிமையாளருமான ஆசிரியர் ரேமளா சொன்னார்.

இதற்கு முன்னர் விசாரிக்கப்பட்ட சுங்கை பாக்காப் மருத்துவமனை டாக்டர் அமிருல் அஹ்மாட், வசந்தபிரியாவின் கழுத்திலும் இடபக்க கையிலும் தழும்புகள் இருந்ததாக கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இவ்வழக்கில் விசாரிக்கப்படும் ரேமளா எட்டாவது நபராவார். இவ்வழக்கு நாளை மீண்டும் விசாரணைக்கு வருகிறது.

48 வயதாக ஆசிரியை ரேமளாவின் கைப்பேசியை திருடியதாக குற்றஞ்சாட்ட நிபோங் தெபால் இடைநிலைப்பள்ளியைச் சேர்ந்த  மாணவி வசந்தபிரியா கடந்த ஜனவரி 24ஆம் தேதி வீட்டின் அறையில் தூக்கிலிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

செபெராங் ஜெயா மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட மாணவி வசந்தபிரியா, ஒரு வார கால சிகிச்சைக்கு பின்னர் பிப்ரவரி 1ஆம் தேதி சிகிச்சை பலனளிக்காமல் மரணமடைந்தார்.

மாணவி வசந்தபிரியாவின் மரணம் மலேசியர்கள் மத்தியில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.


No comments:

Post a Comment