Tuesday, 3 July 2018

29 தொழிலாளர்கள் உடனடி பணி நீக்கமா? நிர்வாக இயக்குனருடன் விவாதிப்பேன் - சிவநேசன்


ரா.தங்கமணி

சுங்கை சிப்புட்-
கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வரும் தொழிலாளர்களை முறையான காரணமின்றி வேலை நிறுத்தம் செய்ய முடியாது எனவும் தொழிற்சாலை நிர்வாக இயக்குனருடன் இவ்விவகாரம் குறித்து கலந்தாலோசிக்கப்படும் எனவும் பேரா மாநில மனிதவள ஆட்சிக்குழு உறுப்பினர் அ.சிவநேசன் தெரிவித்தார்.

திங்கட்கிழமை (இன்று) முதல் வேலைக்கு வர வேண்டாம் என கடந்த  கடிதம் வழங்கப்பட்ட 29 தொழிலாளர்களும் தங்களை வேலையிலிருந்து நீக்க வேண்டாம் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

இவ்விவகாரம் குறித்து சம்பந்தப்பட்ட தொழிற்சாலைக்கு வருகை புரிந்த சிவநேசன், முறையான காரணங்கள் இன்றி தொழிலாளர்களை வேலை நீக்கம் செய்ய முடியாது.

ஆட்குறைப்பு நடவடிக்கையாகவே இந்த 29 தொழிலாளர்களும் வேலையிலிலிருந்து நீக்கப்படுகின்றனர் என நிர்வாக  தரப்பில் சொல்லப்படுகிறது.

ஆனால் தொழிலாளர்களை ஆட்குறைப்பு செய்வதற்கு  முன்னர் மனிதவள இலாகாவுக்கு தெரியபடுத்தியிருக்க வேண்டும்.  நிறுவனம் நஷ்டத்தை எதிர்நோக்குமானால் முதலில்  தொழிலாளர்களுக்கான கூடுதல் வேலை நேரத்தை குறைக்க வேண்டும். இரண்டாவது வெளிநாட்டு தொழிலாளர்களை பணியில் அமர்த்தக்கூடாது. மூன்றாவது நீண்ட நாள் பணியாற்றுபவர்களை விட சிறிது காலமே பணியாற்றியவர்களை முதலில் வேலை நீக்கம் செய்ய வேண்டும்.

இதை எதையுமே செய்யாமல் நீண்ட நாட்களாக பணியாற்றியவர்களை உடனடியாக பணியிலிருந்து நீக்க முடியாது.

இத்தொழிலாளர்களின் பிரச்சினை குறித்து இந்நிறுவனத்தின் இயக்குனர் ஃபீஃபீ லியோங்கை வரும் வியாழக்கிழமை சந்தித்து விவாதிப்பதாகவும் சிவநேசன் கூறினார்.

நிர்வாக இயக்குனருடன் சந்திப்பு நடத்தப்பட்டு இறுதி முடிவு எடுக்கப்படும் வரை கடிதம் வழங்கப்பட்ட 29 தொழிலாளர்களும் தங்களது பணியை தொடர்வர் எனவும் அதில் எவ்வித பிரச்சினையும் இல்லை எனவும் அவர் சொன்னார்.

இன்று நடைபெற்ற சந்திப்பின்போது சுங்கை சிப்புட் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.கேசவன், கோலகங்சார் மனிதவள இலாகா அதிகாரி ஷர்மிளா, ஜசெகவைச் சேர்ந்த ஹெலன், சுங்கை சிப்புட் பிகேஆர் கட்சியின் துணைத் தலைவர் காசிமுத்து ஆகியோர் உடனிருந்தனர்.

No comments:

Post a Comment