ரா.தங்கமணி
ஈப்போ-
மாநில ஆட்சிக்குழு உறுப்பினராக பொறுப்பேற்றுள்ள தாம் மக்களின் நலனுக்காக பாடுபடவிருப்பதாக மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் அ.சிவநேசன் குறிப்பிட்டார்.
பேரா மாநிலத்திலுள்ள அனைத்து மக்களின் நலனும் காக்கப்படும் அதே வேளையில் இந்தியர்களின் வாழ்வாதார மேம்பாட்டையும் உறுதி செய்யும் கடப்பாட்டையும் தாம் கொண்டுள்ளேன்.
நடந்து முடிந்த 14ஆவது பொதுத் தேர்தலின்போது இந்திய சமுதாயத்தின் மேம்பாட்டை உறுதி செய்யும் வகையில் கொடுக்கப்பட்ட வாக்குறுதிகள் நிறைவேற்றம் காண்பதற்கு தாம் நடவடிக்கைகளை முன்னெடுக்கவிருப்பதாகவும் இன்று நடைபெற்ற பேரா மாநில இந்து சங்கத்தின் ஆண்டு கூட்டத்தை தொடக்கி வைத்து உரையாற்றுகையில் இவ்வாறு கூறினார்.
குறிப்பாக, அரசுத் துறையில் இந்தியர்களுக்கான வேலை வாய்ப்பை 10 விழுக்காடாக உயர்த்துவது மிக முக்கியமானதாக கருதப்படும். தேசிய முன்னணி ஆட்சியில் 7 விழுக்காடு மட்டுமே வாய்ப்பு வழங்கப்பட்டு வந்த நிலையில் பக்காத்தான் ஹராப்பான் ஆட்சியில் அது 10 விழுக்காடாக உயர்த்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.
மேலும், பெரும்பாலான பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளின் பல்கலைக்கழக நுழைவுக் கட்டணத்தை செலுத்த சிரமப்படுகின்றனர். அதனை நிவர்த்தி செய்யும் வகையில் உயர்கல்வி மாணவர்களுக்கான நுழைவுக் கட்டணத்தை செலுத்துவதற்கான சிறப்பு நிதி தோற்றுவிக்கப்படும் என அவர் மேலும் சொன்னார்.
இந்நிகழ்வில் மலேசிய இந்து சங்கத்தின் தலைவர் டத்தோ மோகன் ஷாண், பேரா மாநில ம.இ.சங்கத்தின் தலைவர் பொன்.சந்திரன் உட்பட செயலவையினரும் உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment