கோலாலம்பூர்-
வெறும் சமையல் அறையில் மட்டுமே பூட்டிக் கிடந்த 'பெண்ணினம்' தனது அடிமை சங்கிலியை உடைத்தெறிந்து இன்று ஆண்களுக்கு நிகராக தலைமைத்துவம் வகிப்பதிலும் அண்டங்கள் கடந்து விண்வெளி செல்வதிலும் சாதனை படைத்துக் கொண்டிருக்கிறது.
பெண்கள் என்றாலே ஆணாக்கத்திற்கு அடிமைப்பட்டு கிடக்க வேண்டும் என்ற 'சித்தாந்தங்கள்' மலையேறி விட்டன. பெண்கள் என்றாலே வணக்கத்திற்கு உரியவளாகவும், அன்புக்கு நிகரானவளாகவும் கருதப்படுகிறாள்.
ஆண்கள் எவ்வளவு வலிமையானவர்களாக இருந்தாலும் ஒர் உயிரை படைக்கும் (பெற்றெடுக்கும்) சக்தியை இறைவன் பெண்களிடமே கொடுத்துள்ளான். ஒரு குழந்தை தன் தாயின் அரவணைப்பில் வளர்ந்தால் நல்லவனாகவும் சிறந்தவனாகவும் உருவெடுக்கும் என்பதற்கு பல சான்றுகள் உள்ளன.
'ஒவ்வோர் ஆணின் வெற்றிக்கு பின்னாலும் ஒரு பெண் இருக்கிறாள்' என சொல்லப்படுவதெல்லாம் ஆணின் முயற்சிக்கு துணை நின்று தியாகம், கருணை, அன்பு ஆகியவற்றை வழங்கி அவனை உற்சாகப்படுத்தும் பெண்ணினத்தின் அருமையை சொல்வதாகவே இந்த வரி அமைகிறது.
'அன்புக்கு' அன்னை திரேசா, 'தலைமைக்கு' அன்னை இந்திரா காந்தி, 'விண்வெளி சாதனைக்கு' கல்பனா சால்வா, 'ஒடுக்கப்பட்ட நாட்டில் பெண்களின் கல்வி உரிமைக்காக குரல் கொடுத்த' மலாலா, 'அரசியல் ஆளுமை' ஜெ.ஜெயலலிதா, 'பெண்ணினம் ஒடுக்கப்பட்ட நாட்டில் தலைமை அரியணை ஏறிய' பெனாசீர் பூட்டோ, 'மதமாற்ற வழக்கில் முன்னாள் கணவனால் பிரித்துக் கொண்டு செல்லப்பட்ட குழந்தையை மீட்க சட்டப் போராட்டம் நடத்திய' ஆசிரியை இந்திரா காந்தி என 'பெண்ணினம்' தலைநிமிரச் செய்த இவர்களின் பங்கு அளப்பரியது.
இவர்களால் மட்டுமல்லாது 'பெண்ணினம்' இன்னும் தலைநிமிர பாடுபடும் அனைத்துப் பெண்களுமே வணக்கத்திற்குரியவர்கள் தான்.
இன்று கொண்டாடப்படும் 'உலக மகளிர் தினம்' பெண்களை கொண்டாடுவதாக மட்டுமல்லாமல் அவர்களை எந்நாளும் வணக்கத்திற்குரியவர்களாகவும் போற்றுவோம்.
No comments:
Post a Comment