ஈப்போ-
"மெட்டுப் போடு மெட்டுப் போடு என் தாய் கொடுத்த தமிழுக்கில்லை தட்டுப்பாடு" என்ற பாடல் வரியை கேட்காதவர்கள் யாருமே இங்கு இருக்க முடியாது. அதே போன்றுதான் எத்தகைய பாடலும் புது மெட்டில் அமைந்தால் அதன் ரசனை தனி உலகத்திற்கே நம்மை அழைத்துச் செல்லும்.
தற்போது அனைத்து இடத்திலும் 'இசை புரட்சி' நிகழ்த்தப்பட்டு வருகிறது. மனதை வருடிச் செல்வது இசை மட்டுமே என்ற ரீதியில் திரைப்படங்களில் மட்டுமல்லாது தமிழ் வாழ்த்தும் தனி பாடலும் தற்போது உருமாற்றம் கண்டு வருகிறது.
என்ன வரி, அதன் அர்த்தம் என்னவென்றே புரியாத பாடல்களுக்கெல்லாம் தற்போது சிறார்கள் தலையாட்டிக் கொண்டு ரசிக்கும் வேளையில் பள்ளிகளில் இசைக்கப்படுகின்ற 'பள்ளி பாடல்' ரசனை மிகுந்ததாகவும் அர்த்தம் பொதிந்ததாகவும் அமைந்திட வேண்டாமா?
'பள்ளி பாடல்' கூட தனது பள்ளியின் அடையாளத்தை நிலைநாட்டிட வேண்டும் என்ற வேட்கையோடு தனது பள்ளிக்கான ஒரு புதிய பாடலை உருவாக்கியுள்ளார் ஆசிரியை குமாரி தமிழரசி முனியாண்டி.
பேராக், பாரிட் புந்தார், கிரியான் மாவட்டத்தில் அமைந்துள்ள ஆறுமுகம் பிள்ளை தமிழ்ப்பள்ளியில் தமிழாசிரியராக பணியாற்றும் குமாரி தமிழரசி, 'வாழ்வின் சுடரொளியே... கல்வி வாழ்வின் சுடரொளியே' எனும் பாடலை உருவாக்கியுள்ளார்.
இப்பாடல் உருவாக்கம் குறித்து 'பாரதம்' மின்னியல் ஊடகத்துடன் அவர் தனது அனுபவங்களை பகிர்ந்து கொண்டார்.
ஆறுமுகம் தமிழ்ப்பள்ளியில் தமிழாசிரியராக மட்டுமல்லாமல் துணைப் பாடமாக இசைக் கல்வியையும் மாணவர்களுக்கு போதித்து வருகிறேன். ஆசிரியராக பணிபுரிந்து வந்த சில நாட்களிலேயே இப்பள்ளிகென தனிப் பாடல் உருவாக்க வேண்டுமென்ற எண்ணம் தோன்றியது.
பள்ளி பாடல் என்பது தனித்துவமிக்க அடையாளமாக கருதப்படுவது மிகவும் குறைவாகவே உள்ளது. இது நான் கண்ட உண்மையாகும். இதனாலேயே இப்பள்ளிக்கான பாடலை உருவாக்கும் முயற்சியை மேற்கொண்டேன்.
அதற்கு பள்ளி தலைமையாசிரியர் இரா. சுப்பிரமணியம் ஆதரவும் ஒத்துழைப்பும் நல்கினார்.
அதற்கேற்ப புதிதாக உருவாக்கம் காணும் பாடலுக்கான வரியை நானே எழுதினேன். இந்த பாடலின் இசை சிறப்பாக அமைந்திட வேண்டும் என்பதால் இந்நாட்டில் புகழ்பெற்ற இசையமைப்பாளர்களில் ஒருவரான ஜெய் இசையில் பாடலை உருவாக்கும் பணி மேற்கொள்ளப்பட்டது. கோலாலம்பூரில்தான் இப்பாடல் பதிவு நடைபெற்றது.
பள்ளியின் பாடலை எழுதும்போது எங்கள் பள்ளிக்கான கருப்பொருளோடு தொடங்கினேன். 'வாழ்வின் சுடரொளியே... கல்வி...' என தொடங்கும் பாடலை முதலாம் ஆண்டு முதல் 6ஆம் ஆண்டு வரையிலான மாணவர்கள் எளிதில் புரிந்து, பாடும் வகையில் இருக்கும் வகையில் எழுதினேன்.
சென்ற வருடம் பள்ளி பரிசளிப்பு விழாவில் அதிகாரப்பூர்வமாக இந்த பள்ளி பாடல் அறிமுகம் செய்யப்பட்டது.
இனிவரும் காலங்களில் தமிழ்ப்பள்ளிக்கான அடையாளமாக 'பள்ளி பாடல்'
திகழ்ந்திட வேண்டும். அதற்கு ஒவ்வொரு பள்ளியும் ஆக்கப்பூர்வமாக செயல்பட வேண்டும் என்கிறார் குமாரி தமிழரசி.
No comments:
Post a Comment