Tuesday, 6 February 2018

மாணவி வசந்தபிரியாவை 5 மணிநேரமாக அறையில் தடுத்து வைத்தது 'குற்றமே'- வழக்கறிஞர் டத்தோ நரான் சிங்



ரா.தங்கமணி/ புனிதா சுகுமாறன்

செபெராங் பிறை-
கைத்தொலைபேசியை திருடியதன் குற்றச்சாட்டின் பேரில் மாணவி வசந்தபிரியாவை ஐந்து மணிநேரம் ஒரு தனி அறையில் அடைத்து வைத்திருந்தது ஒரு குற்றமாகவே கருதப்படும் சூழலில் சம்பந்தப்பட்ட ஆசிரியர் மீது சட்ட நடவடிக்கை பாய வேண்டும் என வழக்கறிஞர் டத்தோ நரான் சிங் தெளிவுபடுத்தினார்.

நிபோங் தெபால் இடைநிலைப்பள்ளி மாணவியான வசந்தபிரியா கைத்தொலைபேசியை களவாடினார் என குற்றஞ்சாட்டப்பட்டு ஐந்து மணிநேரமாக உணவு அருந்தவும் கழிவறைக்கு செல்லவும் அனுமதிக்காமல் தனி அறையில் தடுத்து வைத்திருந்தது சட்டப்படி குற்றமாகும். நாளிதழ்களில் வெளிவந்த செய்திகளின் அடிப்படையை ஆராய்ந்து பார்த்தோமானால் இது ஒரு குற்றமாகவே கருதப்படும்.

ஓர் ஆசிரியர் எனும் ரீதியில் அவரின்  இத்தகைய நடவடிக்கை பள்ளி நிரந்தர செயல்முறை வழிகாட்டியை (எஸ்.ஓ.பி) மீறியுள்ளதை புலப்படுத்துகிறது. இதுவே அவர் மீது சட்ட நடவடிக்கை எடுப்பதற்கான முதல் வழிகாட்டியாகும்.
மாணவியை தனி அறையில் அடைத்து வைத்திருந்தது உண்மை  என போலீஸ் விசாரணையில் நிரூபிக்கப்பட்டால்  சம்பந்தப்பட்ட ஆசிரியை மீது சட்ட நடவடிக்கை எடுக்கலாம்.

அதோடு பள்ளி முடிந்து ஒரு மாணவியை பெற்றோர் அனுமதி இன்றி சம்பந்தப்பட்ட ஆசிரியரின் கணவர் வாகனத்தில் ஏற்றிச் சென்றுள்ளது ஒரு குற்றமாகும் என மாணவி வசந்தபிரியாவின் பெற்றோரை சந்தித்து அனுதாபம் தெரிவித்துக் கொண்ட புந்தோங் மைபிபிபி கட்சி ஒருங்கிணைப்பாளருமான டத்தோ நரான் சிங் வலியுறுத்தினார்.

மாணவி வசந்தபிரியாவின் விவகாரம் அரசியலுக்கு அப்பாற்பட்டதாகும். அரசியலை சாராமல் ஒரு வழக்கறிஞர் எனும் முறையில் மாணவி வசந்தபிரியாவின் வழக்கில் இலவசமாக ஆஜராக தயாராக இருக்கிறேன்.

மாணவியின் குடும்பத்தினர் கேட்டுக் கொண்டால் இலவசமாக இவ்வழக்கை நடத்துவேன் என குறிப்பிட்ட டத்தோ நரான் சிங், வசந்தபிரியாவை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுபதாபத்தைத் தெரிவித்துக் கொள்வதாக கூறினார்.

No comments:

Post a Comment