Friday, 29 December 2017
மனிதத் தவறுகளால் வெள்ளப் பிரச்சினை; தீர்வு காண சிறப்பு கலந்துரையாடல் நடத்துக- டாக்டர் ஜெயகுமார் மகஜர்
புனிதா சுகுமாறன்
ஈப்போ-
சுங்கை சிப்புட் வட்டாரத்தில் ஏற்பட்ட பெரு வெள்ளத்திற்கு காரணம் அங்கிருந்த குட்டைகளை மூடி வீடமைப்புத் திட்டங்களை மேற்கொண்டதுதான் என குறிப்பிட்ட அதன் நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் ஜெயகுமார், இங்கு ஏற்படும் வெள்ளப் பிரச்சினைக்கு தீர்வு காண சிறப்பு கலந்துரையாடலை ஏற்பாடு செய்ய வேண்டும் என கேட்டுக் கொண்டார்.
கடந்த செப்டம்பர், நவம்பர் மாதங்களில் பெய்த கனமழையால் சுங்கை சிப்புட் வட்டாரத்தில் 8 குடியிருப்புகளில் வெள்ளம் ஏற்பட்டு பெரும் சேதத்தை விளைவித்தது. ஆனால் இந்த சேதத்திற்கு குட்டைகளை மூடி வீடமைப்புத் திட்டங்கள் மேற்கொண்டு நீர் வேறெங்கும் செல்வதற்கான வழியில்லாததால் குடியிருப்புகளில் சேதத்தை ஏற்படுத்தியது.
ஆறுகளை அகலப்படுத்துவதாக சொல்லி ஆற்று மணலை அருகிலேயே கொட்டுவது, வெட்டிய மரங்களை அப்புறப்படுத்தாமல் கைவிடுவதால் ஆற்றின் நீரோட்டம் தடைபடுவது என மனிதத் தவறுகளினால் இன்று பல மக்கள் வெள்ளத்தின் பாதிப்புக்கு ஆளாகின்றனர்.
இப்பிரச்சினைக்கு உரிய தீர்வு காண பேராக் மந்திரி பெசார் டத்தோஶ்ரீ ஸம்ரி அப்துல் காதீர், அரசுத் துறை, இலாகாக்களான மாவட்ட நில அலுவலகம், கோலகங்சார் மாநகர் மன்றம், நீர்பாசன, வடிக்கால் அமைப்பு இலாகா ஆகியவற்றை கூட்டி பாதிக்கப்பட்ட மக்களுடன் சிறப்பு சந்திப்பு நடத்த வேண்டும். அதில் என்னை அழைத்தால் நானும் சில கருத்துகளை முன்வைப்பேன் என இன்று பேராக் மாநில அரசு செயலகத்தில் மகஜர் வழங்கும்போது டாக்டர் ஜெயகுமார் கூறினார்.
பல்வேறு கோரிக்கைகளை உள்ளடக்கி டாக்டர் ஜெயகுமார் வழங்கிய மகஜரை மந்திரி பெசாரின் அலுவலக சிறப்பு அதிகாரி அஸாட் பெற்றுக் கொண்டார்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment