Saturday, 9 December 2017

இரு முதன்மை பதவிகளுக்கு 'அம்னோவில்' போட்டியில்லை


கோலாலம்பூர்-
அம்னோவின் இரு முதன்மை பதவிகளுக்கு போட்டியில்லை என தற்போது நடைபெற்று வரும் அதன் மாநாட்டில் முன்வைக்கப்பட்ட பரிந்துரை ஏகமனதாக ஏற்றுக் கொள்ளப்பட்டது.

வரும் கட்சி தேர்தலில் தலைவர், துணைத் தலைவர் பதவிகளுக்கு போட்டி நிலவக்கூடாது என அம்னோ இளைஞர் பிரிவு முன்வைத்த கோரிக்கையை பேராக் பிரதிநிதி வழிமொழிய கட்சியின் நிரந்தர தலைவர் டான்ஶ்ரீ  பட்ருடின் அமிருல்டின் அதிகாரப்பூர்வமாக ஏற்றுக் கொள்வதாக அறிவித்தார்.

வரும் 14ஆவது பொதுத் தேர்தலில் நமது பலத்தை வலுப்படுத்துவதற்கு ஏதுவாக கட்சி சட்டவிதிகளின் 5ஆவது பிரிவின்படி இந்த பரிந்துரையை முன்மொழிவதாக இளைஞர் பிரிவு கூறியுள்ளது.

இதன்படி கட்சியின் நடப்புத் தலைவரும் பிரதமருமான டத்தோஶ்ரீ நஜிப் துன் ரசாக், கட்சியின் இடைக்கால துணைத் தலைவரும் (உதவித் தலைவர்) துணைப் பிரதமருமான டத்தோஶ்ரீ ஸாயிட் ஹமிடி ஆகியோர் கட்சியின் தேர்தலில் போட்டியின்றி ஏகமனதாக தேர்ந்தெடுக்கப்படவுள்ளனrர்.

ஆகக் கடைசியாக அம்னோ கட்சியில் 1987ஆம் ஆண்டு தலைவர் பதவிக்கு போட்டி நிலவியது. அப்போது துன் மகாதீர் முகம்மதுக்கும் தெங்கு ரஸாலிக்கும் இடையே நிலவிய இப்போட்டியின் விளைவாக அம்னோ இரண்டாக பிளவுப்பட்டது.

அதனைத் தொடர்ந்து, அந்த முதன்மை பதவிக்கு 2013இல் டத்தோஶ்ரீ நஜிப்பை எதிர்த்து தெங்கு ரஸாலி போட்டியிடுவதாக அறிவித்தார். ஆனால் வேட்புமனுவின்போது தனது வேட்புமனுவை தெங்கு ரஸாலி தாக்கல் செய்யாததால் நஜிப் போட்டியின்றி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

அதேபோன்று 1993இல் கட்சியின் துணைத் தலைவர் பதவிக்கு டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிமுக்கும் துன் அப்துல் கஃபார் பாபாவுக்கும் போட்டி நிலவியது.

இப்போட்டியிலிருந்து கஃபார் பாபா பின்வாங்கியதால் அன்வார் போட்டியின்றி துணைத் தலைவராக பதவியேற்றார்.

அதற்கு ஒரு மாதத்திற்கு பின்னர் துணைப் பிரதமர் பதவியிலிருந்து கஃபார் பாபா விலகிட டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் அப்பதவியை ஏற்றுக் கொண்டார்.

No comments:

Post a Comment