Friday, 15 December 2017

'அதிருப்தி அலை'; டாக்டர் ஜெயகுமாரின் வெற்றி வாய்ப்பை பாதிக்குமா?


ரா.தங்கமணி
சுங்கை சிப்புட்-
வரும் 14ஆவது பொதுத் தேர்தல் இன்னும் சில மாதங்களில் நடைபெறலாம் என எதிர்பார்க்கப்படும் சூழலில் சுங்கை சிப்புட் நாடாளுமன்ற உறுப்பினரான டாக்டர் மைக்கல் ஜெயகுமாருக்கு வெற்றி வாய்ப்பு மிக குறைவாக உள்ளது என கணிக்கப்படுகிறது.

2008ஆம் ஆண்டு நடைபெற்ற 12ஆவது பொதுத் தேர்தலில் இத்தொகுதியில் தேசிய முன்னணி வேட்பாளராக களமிறங்கிய மஇகாவின் முன்னாள் தேசியத் தலைவர் துன் (டத்தோஶ்ரீ) ச.சாமிவேலுவை தோற்கடித்து சுங்கை சிப்புட் நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார் டாக்டர் ஜெயகுமார்.

2013ஆம் ஆண்டு பொதுத் தேர்தலிலும் தேசிய முன்னணி வேட்பாளராக களமிறங்கிய பிரதமர் துறை முன்னாள் துணை அமைச்சர் டத்தோஶ்ரீ எஸ்.கே. தேவமணியையும் தோற்கடித்து மீண்டும் அப்பதவியை தக்கவைத்துக் கொண்டார்.

ஆனால் எதிர்க்கட்சியை பிரதிநிதித்து இருப்பதால் மக்களுக்கான ஆக்ககரமான திட்டங்களை முன்னெடுக்க முடியாத சூழலில் அவர் மீதான 'அதிருப்தி அலை' வீச தொடங்கியுள்ளது.

கடந்த  9 ஆண்டுகளாக அவர் இத்தொகுதி மக்களுக்கு எவ்வித மேம்பாட்டையும் கொண்டு வர முடியாத சூழலில் இங்குள்ள மக்கள் அடிப்படை பிரச்சினைகள் உட்பட பல்வேறு பிரச்சினைகளுக்கு தேமு தலைவர்களை நாடிச் செல்லும் சூழ்நிலை நிலவுகிறது.

'சிறந்த மருத்துவர்' என பெயர் பெற்ற டாக்டர் ஜெயகுமாரின் அடிமட்ட வேலைகள்  சிறப்பானதாகவும் களப்பணி ஆற்றும் நடவடிக்கையும் போற்றத்தக்கவை. ஆனால் அது மட்டும் இங்குள்ள மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வாக அமைந்து விடாது. மாறாக இங்குள்ள மக்கள் சந்திக்கும் பிரச்சினைகள் 'பணத்தை' அடிப்படையாகக் கொண்டவையாகும்.

மருத்துவ உதவி, பிள்ளைகளின் கல்வி தேவை, வீட்டு பொருளாதாரப் பிரச்சினை உட்பட பல பிரச்சினைகளை எதிர்நோக்கியுள்ள சுங்கை சிப்புட் மக்களுக்கு தற்போது தேவையானது அடிப்படை பிரச்சினையை தீர்க்கக்கூடிய 'மக்கள் பிரதிநிதியே'.

'பணம்' ஒன்றால் மட்டுமே இங்குள்ள மக்களின் பிரச்சினைக்கு தீர்வு காண முடியும் என்ற சூழ்நிலையில் மானியம் ஏதும் கிடைக்கப்பெறாத எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினரான டாக்டர் ஜெயகுமார் மீதான 'அதிருப்தி'  தலைதூக்கியுள்ளது. இந்த 'அதிருப்தி' வரும் பொதுத் தேர்தலில் பலமாக எதிரொலிக்கலாம் என நம்பப்படுகிறது.

No comments:

Post a Comment