Friday, 8 December 2017

"சாலையில் குழிகள், கால்வாய் இல்லை" - தாசேக் ஐஜிபி-இல் நிலவும் அவலம்


புனிதா சுகுமாறன்
ஈப்போ-
40 தொழிற்சாலைகள் அடங்கியுள்ள் தாசேக்  தொழில்பேட்டை பகுதியில் (ஐஜிபி) முறையான சாலைகளும் கால்வாய்களும் இல்லாததால் பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொள்வதாக தொழிற்சாலை முதலாளிகள் கண்டனக் குரலை எழுப்பினர்.

இப்பகுதியில் பல்வேறு தொழிற்சாலைகள் அமைந்துள்ளதால் லோரிகளும் வாகனங்களும் அடிக்கடி வந்து செல்கின்றன. ஆனால் இங்கு குண்டும் குழியுமாக இருக்கும் சூழலில் வாகனங்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றன என தொழிற்சாலை முதலாளிகளான ஜுஹாய்மி, ஏ.பி.லோகரூபன், சங்கர், அலெக்ஸ் பவுல்ராஜ் உட்பட பலர் கூறினர்.
இங்கு நிலவும் பிரச்சினை தொடர்பில் பல ஈப்போ மாநகர் மன்றத்திடம் முறையிட்டும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. மானியம் இல்லாததால் சீரமைப்புப் பணியை மேற்கொள்ள முடியவில்லை என ஈப்போ மாநகர் மன்றம் கூறும் காரணம் கோபத்தை மட்டுமே அதிகரிக்கச் செய்வதாக அவர்கள் தெரிவித்தனர்.

சாலை குழியாகவும் கால்வாய் இல்லாததாலும் மழைக் காலங்களில் நீர் தேங்கி நிற்பதோடு குழி எதுவும் தெரியாததால் லோரிகள் அதில் சிக்கிக் கொள்ளக்கூடிய அவலநிலையை நாங்கள் எதிர்நோக்குகிறோம்.

ஈப்போ வட்டாரத்தில் மிகப் பெரிய தொழிற்பேட்டையாக விளங்கும் இங்கு நிலவும் மோசமான சூழலால் இப்பகுதி மீது தவறான கண்ணோட்டம் நிலவுவதாக அவர்கள்  முறையிட்டனர்.
இப்பிரச்சினைக்கு உரிய தீர்வினை ஈப்போ மாநகர் மன்றம் முன்னெடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்த முதலாளிமார்கள்,  இனியும் இந்த அவலநிலையை நாங்கள் எதிர்கொள்ள முடியாது என்றனர். இன்று இப்பகுதியில் நிகழ்ந்த செய்தியாளர் சந்திப்பின்போது பிஎஸ்எம் கட்சியைச் சேர்ந்த குணசேகரனும் உடனிருந்தார்.

No comments:

Post a Comment