ரா.தங்கமணி
ஈப்போ-
வரும் 14ஆவது பொதுத் தேர்தலில் தேசிய முன்னணி வேட்பாளர்களின் வெற்றியை உறுதி செய்ய ஐபிஎப் கட்சி தனது தேர்தல் இயந்திரத்தை முடுக்கி விடப்படுகிறது என அக்கட்சியின் தேசியத் தலைவர் டத்தோ எம்.சம்பந்தன் தெரிவித்தார்.
14ஆவது பொதுத் தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் பேராக் மாநிலத்தில் தேசிய முன்னணியின் வெற்றியை உறுதி செய்ய வேண்டியது அவசியமானதாகும். அதற்கேற்ப தேர்தலுக்கான ஆயத்த நிலை குறித்து கட்சி தொகுதித் தலைவர்களிடம் கலந்தாலோசிக்கப்படுகிறது.
தற்போது பேராக் மாநிலத்தில் 780 புதிய வாக்காளர்களை கட்சி பதிவு செய்துள்ளது. குடும்ப உறுப்பினர்களை வாக்காளர்களாக மாற்றும் நடவடிக்கையான இது, தேசிய முன்னணி வலுவான ஆதரவாக மாறும் என்பதில் ஐயமில்லை என நேற்று இங்குள்ள மாநில ஐபிஎப் அலுவலகத்தில் நடைபெற்ற மாநில தொகுதித் தலைவர்களுடனான சந்திப்பின்போது டத்தோ சம்பந்தன் குறிப்பிட்டார்.
மாநில தேர்தல் இயந்திரம் முதன் முதலாக தம்பூனில் தொடங்கப்படவுள்ளது என குறிப்பிட்ட அவர், தேர்தலில் போட்டியிடுவதற்கான வாய்ப்பை தேசிய முன்னணியிடம் கோரியுள்ளோம். தேர்தல் எல்லை சீரமைப்பு முடிந்ததும் புதிய தொகுதிகள் அடையாளம் காணும்போது ஐபிஎப் கட்சி நாடாளுமன்ற, சட்டமன்றத் தொகுதிகள் வழங்கப்படும் என நம்பிக்கை கொண்டுள்ளோம்
இந்திய சமுதாயத்திற்கு பிரதமர் டத்தோஶ்ரீ நஜிப் துன் ரசாக் பல சேவைகளை மேற்கொண்டு வருகின்றார். தமிழ்ப்பள்ளிக்கு உதவி, மலேசிய இந்தியர்களுக்கான பெருவரைவு திட்டம், செடிக் நிதியுதவி, அடையாள அட்டை விவகாரத்திற்கு தீர்வு என பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.
தேசிய முன்னணிக்கான இந்தியர்களின் ஆதரவு நிலைபெற்றிட ஐபிஎப் கட்சி களப்பளி ஆற்றும் என குறிப்பிட்ட செனட்டருமான டத்தோ சம்பந்தன், பேராக் மாநிலத்தில் மீண்டும் தேசிய முன்னணி ஆட்சி நிலைபெற கட்சி உறுப்பினர்கள் பாடுபடுவர் என்றார்.
இச்சந்திப்பில் பேராக் மாநில ஐபிஎப் கட்சி தலைவர் மாணிக்கம், செயலாளர் சங்கர் உட்பட செயலவையினரும் தொகுதித் தலைவர்களும் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment