Wednesday, 27 December 2017

விவசாயிகள் நலன் காக்க சிறப்பு திட்டங்களை அறிமுகப்படுத்துக; அ.சிவநேசன் வலியுறுத்து

ரா.தங்கமணி

சுங்காய்-
காய்கறிகளை பயிரிடுபவர்களை விட அதை சந்தையில் விற்பனை செய்யும் இடைதர்கர்களே லாபம் அடைவதால் விவசாயிகளின் நலன் காக்கப்பட மத்திய, மாநில அரசுகளும் விவசாயம் சார்ந்த துறைகளும் சிறப்பு திட்டங்களை அறிவிக்க வேண்டும் என சுங்காய் சட்டமன்ற உறுப்பினர் அ.சிவநேசன் வலியுறுத்தினார்.

காய்கறிகளை பயிரிட்டு அதனை அறுவடை செய்யும் வரை விவசாயிகளே பெரும் சவால்களை எதிர்கொள்கின்றனர். உரம் விலையேற்றம், மழைக்காலங்களில் சேதம் என விவசாயிகள் பல்வேறு சவால்களை எதிர்கொள்கின்றனர்.

ஆனால் அவர்களுக்கான லாபத்தை அடையாத நிலையில் விவசாயிகள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வு காண மத்திய அரசாங்கம் சிறப்பு ஒதுக்கீடுகளை வழங்க வேண்டும் என அண்மையில் சுங்காய் விவசாயிகள் சங்கம் ஏற்பாடு செய்த விருந்துபசரிப்பு நிகழ்வில் உரையாற்றிய சிவநேசன் இவ்வாறு கூறினார்.

நாணய மதிப்பு சரிவினால் உர மூட்டைகளின் விலையேற்றம் விவசாயிகளை வெகுவாக பாதித்தது. வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்படும் உர மூட்டைகளை அதிக விலை கொடுத்து வாங்க வேண்டிய இன்னலை அவர்கள் எதிர்நோக்கியுள்ளனர்.

அதுமட்டுமல்லாது, 2018ஆம் ஆண்டு வரவு செலவு தாக்கலின்போது கூட விவசாயிகளுக்காக சிறப்பு மானியங்களோ, திட்டங்களோ அறிவிக்கப்படவில்லை. இதனால் அவர்கள் பெரும் இன்னலுக்கிடையே தங்களது விவசாயத்தை மேற்கொள்கின்றனர்.

மேலும், ஃபாமா எனப்படும் மத்திய வேளாண்மை விற்பனை இலாகா மேற்கொள்ளும் சந்தை நடவடிக்கைகளில் இடைதரகர்களாக செயல்படும் விற்பனையாளர்களே பங்கேற்கின்றனர். அங்கு விவசாயிகள் கலந்து கொள்வதற்கான வாய்ப்புகள் இல்லை.

இத்தகைய சூழலில் சந்தையில் காய்கறிகளின் விலை ஏற்றம் கண்டால் விவசாயிகள் மீதுதான் கோபம் திரும்புகிறது. விற்பனையாளர்களும் இடைதரகர்களுமே காய்கறிகளின் விலையை உயர்த்தி லாபம்  பார்க்கின்றனர். ஆனால் கடுமையாக உழைத்து பயிரிட்டு, விவசாயம் செய்யும் விவசாயிகளிகளின் நலன் காக்க எத்தகைய நடவடிக்கையும் எடுக்கப்படாததுதான் வேதனையான ஒன்றாகும் என சிவநேசன் தமதறிக்கையில் குறிப்பிட்டார்.

இந்நிகழ்வில் பேராக் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் மா ஹங் சூன், தேசிய விவசாயிகள் சங்கத்தின் செயலாளர் சியா யீ மோங் உட்பட 700க்கும் அதிகமானோர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment