Monday, 4 December 2017
தேர்தலில் போட்டியிட கோரிக்கை விடுத்துள்ளோம்; ஆனால் நச்சரிக்க மாட்டோம்- டத்தோஶ்ரீ தனேந்திரன்
ரா.தங்கமணி, வி.மோகன்ராஜ்
கோலாலம்பூர்-
வரும் 14ஆவது பொதுத் தேர்தலில் போட்டியிடுவதற்கு மலேசிய மக்கள் சக்தி கட்சி கோரிக்கை விடுத்துள்ளது. இரு நாடாளுமன்றத் தொகுதிகள், மூன்று சட்டமன்றத் தொகுதிகளில் போட்டியிடுவதற்கான வாய்ப்பை இக்கட்சி கோரியுள்ளது என அதன் தேசியத் தலைவர் டத்தோஶ்ரீ ஆர்.எஸ்.தனேந்திரன் தெரிவித்தார்.
கடந்த தேர்தல்களில் தேசிய முன்னணி தோல்வி கண்ட இடங்களை மீட்டுக் கொடுப்பதற்கான வாய்ப்பாகவே மலேசிய மக்கள் சக்தி இந்த கோரிக்கையை விடுத்துள்ளது.
தேர்தலில் போட்டியிட வாய்ப்பளிப்பதும் மறுப்பதும் பிரதமரும் தேசிய முன்னணித் தலைவருமான டத்தோஶ்ரீ நஜிப்பை பொறுத்தது. போட்டியிட வாய்ப்பளிக்கப்பட்டால் வெற்றியை நிலைநாட்ட பாடுபடுவோம். இல்லையென்றால் தேமுவின் வெற்றிக்காக போராடுவோமே தவிர கட்சிக்குள்ளேயே மோதிக் கொள்ள மாட்டோம்.
எங்களது எதிரி வெளியில் தானே தவிர கூட்டணிக்குள்ளேயே இல்லை. வெளியில் உள்ள எதிர்க்கட்சியினர் தான் எங்களது எதிரி. அவர்களை எதிர்ப்போமே தவிர 'சீட்'டுக்காக கூட்டணிக்குள்ளேயே மோதிக் கொள்ள மாட்டோம்.
மலேசிய மக்கள் சக்தி கட்சி போட்டியிட எத்தனித்துள்ள தொகுதிகளை அடையாளம் கண்டு அவற்றின் வெற்றி வாய்ப்பு குறித்த ஆய்வுகளை மேற்கொண்டு அம்முடிவை பிரதமரிடம் சமர்பித்துள்ளோம்.
போட்டியிட வாய்ப்பளிக்கப்படுமா?, வேட்பாளர் யார் என்பதை பிரதமரின் முடிவுக்கே விட்டு விடுகிறோம். தொகுதிகளை கேட்டு அவரை (பிரதமர்) நச்சரிக்க மாட்டோம் என டத்தோஶ்ரீ தனேந்திரன் கட்சியின் 9ஆவது பேராளர் மாநாட்டிற்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில் அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment