Monday, 11 December 2017

ஜசெகவில் இல்லை 'இனவாதம்'; அம்னோ, மசீச, மஇகா மட்டுமே...- சிவகுமார் ஆவேசம்

புகழேந்தி

ஈப்போ-
சீனர்களை அதிக உறுப்பினர்களாகக் கொண்டுள்ள ஜனநாயக செயல் கட்சி (ஜசெக)  இனவாதக் கட்சி என்றால் ஓர் இனத்தை மட்டுமே அடிப்படையாக் கொண்டு செயல்படும் அம்னோ, மசீச, மஇகா ஆகிய கட்சிகள் 'பல இனக் கட்சிகளா? என பத்துகாஜா நாடாளுமன்ற உறுப்பினர் வீ.சிவகுமார் கேள்வி எழுப்பினார்.

ஜசெக (டிஏபி) ஓர் இனத்தை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு செயல்படவில்லை. அனைத்து இன மக்களையும் உறுப்பினர்களாகக் கொண்டுள்ள பல இன கட்சி. இக்கட்சியின் சட்டவிதிகளிலே அனைத்து இனத்தவர்களும் உறுப்பினர்களாக சேரலாம் என கூறப்பட்டுள்ளது.

ஆனால், தேர்தல் காலங்களின்போதெல்லாம் ஜசெகவை இனவாதக் கட்சி என முத்திரை குத்தும் அம்னோ, முதலில் தனது கட்சியின்  நிலைப்பாடு என்னவென்பதை உணர வேண்டும்.

தேசிய முன்னணியில் உறுப்புக் கட்சியாக இருக்கின்ற அம்னோ, மசீச, மஇகா ஆகிய மூன்று ஓர் இனத்தை சார்ந்தோரை மட்டுமே உறுப்பினராக கொண்டு செயல்படுகிறது.  ஓர் இனத்தின் அடிப்படையில் செயல்படும் இம்மூன்று கட்சிகளுமே இனவாத கட்சிகளாகும்.

ஜசெகவை பிரதிநிதித்து சட்டமன்ற, நாடாளுமன்றத் தொகுதிகளில் மலாய்க்காரர், இந்தியர், சீனர்கள் போட்டியிட்டுள்ளனர். மக்கள் பிரதிநிதியாக தேர்தெடுக்கப்பட்டுள்ளனர். கட்சியின் மத்திய செயலவையில் கூட சீனர்களை தவிர்த்து பிற இனத்தவர்களும் அங்கம் வகிக்கின்றனர்.

அதேபோன்று, அம்னோ முஸ்லீம் அல்லாதவர்களை சட்டமன்ற, நாடாளுமன்றத் தொகுதிகளில் வேட்பாளராக களமிறக்கியுள்ளதா?, மசீசவும்  மஇகா தான் இனத்தைச் சாராத பிற இனத்தவர்களை தேர்தலில் களமிறக்கியுள்ளதா? கட்சியின் மத்திய செயற்குழுவிலாவது இடம் கொடுத்துள்ளனரா?

பிற இனத்தவர்களுக்கு வாய்ப்பளிக்காத இம்மூன்று கட்சிகள்தான் இனவாத கட்சிகள் ஆகும். தேர்தல் நேரங்களில் மலாய்க்காரர்களின் வாக்குகள் பெற வேண்டும் என்பதற்காக ஜசெகவை 'இனவாத கட்சி' என முத்திரை குத்த வேண்டாம் என பேராக் மாநில நம்பிக்கைக் கூட்டணியின் செயலாளருமான சிவகுமார் வலியுறுத்தினார்.

No comments:

Post a Comment