கூர்மையான ஆயுதத்தால் தாக்கப்பட்டு கழுத்திலும் தலையிலும் கடுமையான காயங்களுக்கு இலக்கான இளம் பெண்ணின் சடலம் இங்கு மம்பாங் டி அவானிலுள்ள தாமான் பெர்மாய் செம்பனை தோட்டத்தில் மீட்கப்பட்டது.
காளானை தேடிச் சென்ற 60 வயது மதிக்கத்தக்க ஆடவர் பெண்ணின் சடலத்தை கண்டுள்ளார். கொல்லப்பட்டவர் எஸ்.லெட்சுமி (வயது 28) என அடையாளம் காணப்பட்டுள்ளது.
24 மணிநேரத்திற்குள்ளாக அப்பெண் கொல்லப்பட்டிருக்கலாம் என தெரிவித்த கம்பார் மாவட்ட்ட போலீஸ் தலைவர் சூப்பிரிடென்டண்ட் இங் கோங் சூன், தலையிலும் கழுத்திலும் கூர்மையான ஆயுதத்தைக் கொண்டு தாக்கியத்தில் அவர் உயிரிழந்திருக்கக்கூடும் என தெரிவித்தார்.
சம்பவ இடத்தை சோதனையிட்டதில் கொல்லப்பட்ட பெண்ணின் மோட்டார் சைக்கிள் சாவியும் தலைகவசமும் கண்டெடுக்கப்பட்டுள்ளது. அப்பெண்ணின் மோட்டார் சைக்கிள் பண்டார் பாரு கம்பாரில் உள்ள உணவகத்தில் கைவிடப்பட்டு கிடக்கிறது.
வேறு இடத்தில் கொல்லப்பட்டு சடலம் இங்கு கைவிடப்பட்டதற்கான சாத்தியத்தையும் போலீஸ் நிராகரிக்கவில்லை என அவர் சொன்னார்.
இக்கொலைக்கான காரணம் கொள்ளை சம்பவமாக இருக்க முடியாது. ஏனெனில், அப்பெண்ணின் உடலில் தங்க நகைகள் அப்படியே கிடந்தன.
மரணமடைந்த பெண்ணின் குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மீட்கப்பட்ட சடலம் சவப்பரிசோதனைக்காக கம்பார் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளது.
விசாரணைக்கு உதவும் பொருட்டு கே9 பிரிவு சம்பவ இடத்திற்கு அழைக்கப்பட்டுள்ளது என்ற அவர், இக்கொலைச் சம்பவம் 302 குற்றவியல் பிரிவின் கீழ் விசாரிக்கப்படுகிறது என மேலும் கூறினார்.
No comments:
Post a Comment