Sunday, 31 December 2017

போலீஸ் அதிரடி; துப்பாக்கிச் சூட்டில் 3 ஆடவர்கள் பலி



கோம்பாக்-
பல்வேறு கொள்ளைச் சம்பவங்களில் சம்பந்தப்பட்டுள்ளனர் என நம்பப்படும் மூன்று கொள்ளையர்களை போலீசார் சுட்டுக் கொன்றனர். இச்சம்பவம் ஜாலான் சுங்கை துவா, உலு யாம் பாரு பத்துகேவ்ஸ் பகுதியில்  நேற்று மாலை நிகழ்ந்தது.

பண்டார் பாரு செலாயாங்கிலுள்ள வர்த்தக மையத்திலிருந்து வெள்ளை நிற சுசூக்கி சுவிஸ்ட் ரகக் காரில் ஏறிச் சென்ற இவர்களை கோம்பாக் மாவட்ட போலீசார் சுற்றி வளைக்க முற்பட்டனர்.

போலீசாரை கண்ட சந்தேக நபர்கல் தங்களது வாகனத்தில் தப்பிக்க முயற்சித்துள்ளனர். 30 மணி நேர துரத்தலுக்கு பின்னர் பண்டார் பாரு செலாயாங்கிலிருந்து 10 கிலோ மீட்டர் தூரத்தில் அவர்களை சுற்றி வளைத்த வேளையில் போலீசார்  சரணடையுமாறு கேட்டுக் கொண்டுள்ளனர்.

அச்சமயம் சந்தேக பேர்வழி ஒருவன் போலீசார் நோக்கி சுட்டான். வேறு வழியில்லாததால் போலீசார் மேற்கொண்ட அதிரடி நடவடிக்கை மூன்று பேரும் சுட்டுக் கொல்லப்பட்டனர் என சிலாங்கூர் மாநில குற்றவியல் புலனாய்வு பிரிவுத் தலைவர் எஸ்ஏசி  ஃபட்சில் அஹ்மாட் தெரிவித்தார்.

சம்பந்தப்பட்ட ஆடவர்களின் காரை பரிசோதனை செய்ததில் பெரெட்டா வகை துப்பாக்கியும் இரண்டு பாராங் கத்திகளும் இருந்தன. சுட்டுக் கொல்லப்பட்ட ஆடவர்களிடம் அடையாள ஆவணங்கள் இல்லாததால் அவர்களை அடையாளம் காணமுடியவில்லை எனவும் அவர்கள் 30 முதல் 40 வயதுக்குட்பட்டவர்கள் ஆவர் எனவும் அவர் சொன்னார்.

இம்மூவரும் சிலாங்கூரிலுள்ள வங்கிக்கு வெளியே நடந்த கொள்ளைச் சம்பவங்களில் தொடர்புடைவர்கள் என சந்தேகிப்பதாகவும் இக்கும்பல் ஈடுபட்ட கொள்ளைச் சம்பங்களின் விசாரணை மேற்கொள்ளப்படுகிறது.
இவ்வாண்டு மட்டும் வங்கிக்கு வெளியே 86 கொள்ளைச் சம்பவங்கள் நடந்துள்ளதாகவும் அதில் 8 மில்லியன் வெள்ளி நஷ்டம் ஏற்பட்டுள்ளது எனவும் இம்மூவர் உள்ளடங்கிய கும்பலின் கைவரிசையாக இது இருக்கலாம என நம்புவதாகவும் அவர் கூறினார்.

இக்கும்பல் சிலாங்கூர் மாநிலம் மட்டுமின்றி கோலாம்பூர், நெகிரி செம்பிலான் ஆகியவற்றிலும் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. பிற்பகலில் ஷா ஆலமில் வங்கிக்கு வெளியே நடந்த கொள்ளைச் சம்பவத்தில் 100,000 வெள்ளி நஷ்டமானது என்றார் அவர்.

No comments:

Post a Comment