நேர்க்காணல் : புகழேந்தி, புனிதா சுகுமாறன்
ஈப்போ-
51 விழுக்காட்டுக்கும் அதிகமான இந்திய வாக்காளர்களைக் கொண்டுள்ள தொகுதியாகக் கருதப்படும் புந்தோங் சட்டமன்றத் தொகுதி எதிர்க்கட்சி கோட்டையாக திகழ்வது யார் குற்றம்? என்பதை இந்திய சமுதாயத் தலைவர்கள் உணர வேண்டும்.
மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்படாமல் இன்னும் கலை நிகழ்ச்சியும் கரகாட்டமும் கோலாட்டமும் நடத்தி கொண்டிருக்கும் தலைவர்களால் இந்திய இளைஞர்கள் கண்ணோட்டம் திசை மாறியுள்ளது. மக்களின் குறைகளுக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்படாமல் இருப்பதை புறக்கணிப்பு என்பதா? தொகுதியை மீட்க முடியாது என்ற நம்பிக்கையின்மையா? என பேராக் நேசக்கரங்கள் இயக்கத்தின் தலைவர் ஜெயசீலன் ராஜு கேள்விகளை தொடுக்கிறார்.
'பாரதம்' மின்னியல் ஊடகத்துடனான அவரின் சிறப்பு சந்திப்பின் தொடர்ச்சியை இன்று காண்போம்.
கே: புந்தோங் வட்டாரத்தில் இந்தியர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் என்ன?
ப: நில விவகாரம் தான் இங்குள்ள இந்தியர்கள் எதிர்நோக்கும் முதன்மை பிரச்சினையாகும். கம்போங் தை லீ, கம்போங் செக்கடி, கம்போங் டிபிஐ, கம்போங் சிலிபின், புந்தோங் டூவா தொடர் வீடுகள் ஆகியவற்றில் உள்ள மக்கள் நிலப் பிரச்சினையால் மிகுந்த அதிருப்தியை கொண்டுள்ளனர்.
20 ஆண்டுகளாக புறம்போக்கு நிலங்களில் குடியிருந்த இம்மக்களில் ஒரு பகுதியினருக்கு நிலங்கள் வழங்கப்பட்டுள்ள நிலையில் இன்னும் பலருக்கு நிலங்கள் வழங்கப்படவில்லை.
இதில் வேடிக்கையான விஷயம் என்னவென்றால் இந்த நிலத்தை பெறுவதற்கு 7 தடவைக்கு மேல் நில உறுதி கடிதங்கள் வழங்கப்பட்டுள்ள நிலையில் நிலம் மட்டும் இன்னமும் வழங்கப்படாமல் உள்ளது. ஒவ்வொரு தேர்தல் காலங்களின்போதும் வாக்குறுதி மட்டுமே இவர்களுக்கு மிஞ்சுகிறது.
அதுமட்டுமல்லாது புந்தோங் மார்க்கெட் எவ்வித சீரமைப்புப் பணிகளும் இல்லாமல் இன்னும் அப்படியே கிடக்கின்றது. இங்குள்ள பெரும்பாலான மக்களி தேர்வாக உள்ள இந்த சந்தைப்பகுதியில் மேற்கொள்ளப்படாத சீரமைப்புப் பணியினால் மக்கள் தடுமாறி விழுவதும், காயமடைவதும் நிகழ்ந்துள்ளன.
அதேபோன்று புந்தோங் பகுதி பல்வேறு குடியிருப்புகளையும் தாமான்களயும் கொண்டு அபிவிருத்தி கண்டுள்ளது. அதிகமான மக்கள் குடியேறியுள்ள இப்பகுதிகளில் வாகனங்களின் பயன்பாடும் அதிகரித்துள்ளது, ஆனால் அந்த பகுதிக்கு செல்வதற்கான முதன்மை சாலை விரிவாக்கம் செய்யப்படாமல் இன்னமும் பழையபடியே உள்ளது. அதனால் சில நேரங்களில் சாலை நெரிசலும் அதனால் விபத்துகளும் ஏற்படுகின்றன.
குறிப்பாக இந்த சாலை விரிவாக்கம் செய்யப்படாதனால் பிளோமினா கான்வென்ட் தமிழ்ப்பள்ளி, சங்கீத சபா தமிழ்ப்பள்ளி, அரசினர் தமிழ்ப்பள்ளி ஆகியவற்றில் பயிலும் மாணவர்களும் பெரும் மருட்டல் நிலவுகிறது.
இதுமட்டுமல்லாது, ஐஆர்சி கிளப் திடல் எவ்வித பராமரிப்பும் இல்லாமல் கிடக்கிறது. மழைக்காலங்களில் இந்த திடல் ஒரு குட்டை போல காட்சி தரும் அளவுக்கு நீர் தேங்கிறது. பிரச்சினைகள் பல உள்ளன. ஆனால் அவற்றுக்கு தீர்வு தான் கிடைக்கவில்லை.
கே: இப்பிரச்சினைகளுக்கு ஆளும் அரசாங்கம் ஏன் தீர்வு காண்பதில்லை?
ப: கடந்த பல ஆண்டுகளாக புந்தோங் சட்டமன்றத் தொகுதி எதிர்க்கட்சி வசம் உள்ளதால் இத்தொகுதியில் உள்ள இந்தியர்களை புறக்கணிக்கும் நடவடிக்கையின் தொடர்ச்சியே இந்த பிரச்சினைகளுக்கான அடித்தளம் ஆகும்.
இந்த தொகுதியை எதிர்க்கட்சியிடமிருந்து மீட்டெடுப்பது இயலாத காரியம் என்ற அலட்சியப்போக்கின் விளைவே கைவிடப்பட்ட சூழலை இந்தியர்கள் உணர்கின்றனர். எதிர்க்கட்சி வசமுள்ள தொகுதியை மீட்டெடுக்க ஆக்ககரமான நடவடிக்கைகளை தலைவர்கள் மேற்கொள்ள வேண்டும். ஆனால் நடவடிக்கையை மேற்கொள்ளாமல் 'ஜெயித்து விடுவோம்' என்ற கூப்பாடுதான் இங்கு நிலவுகிறது.
எதிர்க்கட்சியின் வசம் பல தொகுதிகள் இருந்தாலும் அத்தொகுதிகளில் மாற்றமும் அபிவிருத்தியும் நடந்துக் கொண்டுதான் இருக்கின்றன. ஆனால் புந்தோங் தொகுதியில் மட்டும்தான் இந்தியர்கள் மீதான புறக்கணிப்பு தொடர்கிறது. இதில் யாரை குறை சொல்வது?
கே: இந்த பிரச்சினைகளுக்கு தீர்வு காண நீங்கள் முன்னெடுத்த நடவடிக்கை?
ப: புந்தோங் வட்டாரத்தில் நிகழும் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் நோக்கில் பேராக் மாநில மந்திரி பெசாரின் கவனத்திற்கு மகஜர் கொடுத்துள்ளோம். பொது இயக்கம் என்ற முறையில் பிரச்சினைகள் அனைத்தும் பட்டியலிடப்பட்டு மகஜராக சமர்ப்பிக்கபப்ட்டுள்ளது. அதற்கேற்ப சில இலாகாக்களிடமிருந்து பதில் கடிதமும் வந்துள்ளன.
கே: இன்றைய சூழலில் புந்தோங் சட்டமன்றத் தொகுதியை தேசிய முன்னணி வெல்வதற்கான வாய்ப்பு உள்ளதா?
ப: தேசிய முன்னணிக்கான வாய்ப்பு உள்ளது. எதிர்க்கட்சி உறுப்பினரின் மீதான அதிருப்தி மக்களிடம் நிலவுகிறது. ஆனால் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதில் ' நமது' தலைவர்கள் செய்யும் அலட்சியமும் பலவீனமும்தான் இன்னமும் எதிர்க்கட்சியை 'மக்கள் பிரதிநிதியாக' அலங்கரிக்கச் செய்கிறது.
மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காணாமல் இன்னமும் எம்ஜிஆர் நிகழ்ச்சி, வண்ணம் தீட்டும் போட்டி, கோலாலட்டம், கரகாட்டம், கலை நிகழ்ச்சி போன்றவற்றை நடத்திக் கொண்டிருந்தால் தேமு தலைவர்கள் 'வெறும் கூத்தாடி'யாக மட்டுமே இன்றைய இளம் வாக்காளர்கள் பார்த்துக் கொண்டிருப்பர். முதலில் இவற்றை மாற்ற வேண்டும். தலைவர்கள் மாறினால் தலைமுறையும் மாறும்.
மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் தலைவனால் (தேமு) மட்டுமே இத்தொகுதியில் வெற்றி பெற முடியும். அதுவரை எதிர்க்கட்சிக்கு தான் வெற்றி வாய்ப்பு.இதை உணர்ந்து, புரிந்து நடந்து கொண்டால் 14ஆவது பொதுத் தேர்தலில் இத்தொகுதியின் 'மக்கள் பிரதிநிதி'யாக தேசிய முன்னணி வேட்பாளர் வாகை சூடுவார்.
----- முற்றும்----
No comments:
Post a Comment