Thursday, 7 December 2017

நவீன் கொலை வழக்கு: அடுத்தாண்டு ஜன.11க்கு ஒத்திவைப்பு


ஜோர்ஜ்டவுன் -
பகடிவதை, சித்திரவதை செய்து கொல்லப்பட்ட டி.நவீனின் மருத்துவ அறிக்கை கிடைக்காததால் இவ்வழக்கு அடுத்தாண்டு ஜனவரி 11ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இன்று ஜார்ஜ்டவுன்  மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கு விசாரணையில் மருத்துவ ரசாயன அறிக்கைகாக தாங்கள் காத்துக் கொண்டிருப்பதாக அரசு தரப்பு துணை வழக்கறிஞர் முகமட் ஷாஃபிக் நீதிமன்றத்தில் தெரிவித்ததைத் தொடர்ந்து இவ்வழக்கு விசாரணையை மாஜிஸ்திரேட் முகம்மட் அமின் ஷாகுல் அடுத்த மாதத்திற்கு ஒத்தி வைத்தார்.

இந்த வழக்கு விசாரணையின்போது நீதிமன்றத்தினுள் நவீனின் பெற்றோரும் குற்றஞ்சாட்டப்பட்டவர்களின் பெற்றோர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர். மற்றவர்கள் நீதிமன்றத்தை விட்டு வெளியேற உத்தரவிடப்பட்டது.

இச்சமயத்தில் குற்றஞ்சாட்டப்பட்ட ஒருவரின் உறவினர் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் நீதிமன்றத்தில் சலசலப்பு ஏற்பட்டது.
கடந்த ஜூன் 6ஆம் தேதி ஐவர் கொண்ட கும்பலால் பகடிவதை, சித்திரவதைக்கு ஆளான நவீன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை வழங்கப்பட்ட போதிலும் சிகிச்சை பலனளிக்காமல் ஜூன் 16ஆம் தேதி பினாங்கு மருத்துவமனையில் மரணமடைந்தார்.

இக்கொலை குற்றச்சாட்டை நால்வர் எதிர்நோக்கியுள்ள நிலையில் கட்டாய மரண தண்டனை வித்க்க வகை செய்யும் குற்றவியல் பிரிவு 302இன் கீழ் விசாரிக்கப்படுகிறது.

No comments:

Post a Comment