ரா.தங்கமணி, கோ.பத்மஜோதி
ஈப்போ-
இந்திய இளைஞர்கள் துடிப்புடன் செயல்பட அவர்களுக்கான உரிய தளம் அமைக்கப்படுவது அவசியமானது என்பதோடு அவர்களுக்கான வாய்ப்புகளும் ஏற்படுத்தி தரப்பட வேண்டும் என பேராக் மாநில இந்து இளைஞர் இயக்கத்தின் தலைவர் எஸ்.ஆனந்தன் வலியுறுத்தினார்.
இந்திய இளைஞர்களுக்கான வாய்ப்புகளை ஏற்படுத்தித் தரும் வகையில் பொது இயக்கங்கள் தங்களின் பங்களிப்பை ஆக்ககரமான செயலாற்ற வேண்டும். அதன் அடிப்படையில் பேராக் மாநில இந்து இளைஞர் இயக்கத்திற்கு தலைமையேற்ற பின்னர் அதனை ஆக்ககரமான இயக்கமாக உருமாற்றியுள்ளேன்.
இந்திய இளைஞர்களிடையே தலைமைத்துவ ஆற்றல் நிரம்பிக் கிடக்கிறது. ஆனால் அதனை வெளிக்கொணர உரிய வாய்ப்புகள் கிடைக்கப்படாமல் இருக்கின்றனர்.
அதனை போக்கும் வகையில் முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கையின் காரணமாக செயல்படாமல் இந்து இளைஞர் இயக்கங்களை மறுசீரமைத்து அதனை உயிர்பெறச் செய்தோம்.
அவ்வகையில் இன்று பல இடங்களில் இந்து இளைஞர் இயக்கம் சிறப்பாக செயல்படுவதோடு ஆக்கப்பூர்வமாக வழிநடத்தும் தலைமைத்துவ பண்பாற்றல் நிறைந்த இளைய சமுதாயத்தினர் நம்முடன் அணி திரண்டுள்ளனர் என அண்மையில் இங்குள்ள தாஜ் கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற பேராக் மாநில இந்து இளைஞர் இயக்கத்தின் 27ஆம் ஆண்டு பேராளர் மாநாட்டில் உரையாற்றுகையில் அவர் இவ்வாறு கூறினார்.
இந்நிகழ்வில் பேராக் இந்து இளைஞர் இயக்கத்தின் சிறந்த இளையோர்களாக சிம்பாங் பூலாய் இந்து இளைஞர் இயக்கத்தின் யமுனா, குனோங் ராப்பாட் இந்து இளைஞர் இயக்கத்தின் யோக நந்தா ராமசாமி ஆகியோர் கெளரவிக்கப்பட்டனர். மேலும் 'ஒரு மாணவர் ஓர் அகராதி' திட்டம் வெற்றியடைய ஆதரவு வழங்கிய இளைஞர்களுக்கு நற்சான்றிதழ் வழங்கி சிறப்பிக்கப்பட்டது.
இம்மாநாட்டில் பேராக் மாநில இளைஞர் மன்றத் தலைவர் அஸ்வானுடின் ஹரிபுடின், மலேசிய இந்து இளைஞர் இயக்கத்தின் தலைவர் சி.அருண்குமார், டிரா மலேசியா அமைப்பின் தலைவர் சரவணன் சின்னப்பன், காமல்வெல்த் இளைஞர் பேரவைத் தலைவர் கிருஷ்ணன் அம்பிகாபதி, சுங்கை சிப்புட் மஇகா தொகுதி செயலாளர் கி.மணிமாறன், முன்னாள் இந்து இளைஞர் இயக்கத்தின் தலைவர் கு.நடேசன், பேராக் மாநில மலேசிய இந்து சங்கத்தின் சமூகநல பிரிவு தலைவி திருமதி பத்மாவதி ஆகியோர் உட்பட இந்து இளைஞர் இயக்கப் பொறுப்பாளர்களும் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment