Saturday, 2 December 2017

சிலாங்கூரை கைப்பற்றும் தேமுவின் எண்ணம் ஈடேறாது- வீ.கணபதி ராவ்

ஷா ஆலம்-
சிலாங்கூர் மாநிலத்தை மீண்டும் கைப்பற்றலாம் என்ற தேசிய முன்னணியின் எண்ணம் ஒருபோதும் ஈடேறாது. மக்கள் நலன் காக்கும் பக்காத்தான் கூட்டணியை தோற்கடித்து மீண்டும் தேசிய முன்னணி ஆட்சியை அமைவதற்கு மக்கள் வழிவிடமாட்டார்கள் என சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் வீ.கணபதி ராவ் குறிப்பிட்டார்.

சிலாங்கூர் மாநில மக்களின் வறுமையை ஒழித்து ஆரோக்கியமான வாழ்க்கை, கல்வி ஆகியவற்றை மேம்படுத்துவதற்கு ஏதுவாக மக்கள் நலத் திட்டங்கள் பலவற்றை மாநில அரசாங்கம் நடைமுறைப்படுத்தியுள்ளது.
குறிப்பாக, மாநிலத்திலுள்ள தமிழ்ப்பள்ளிகளின் வளர்ச்சிக்கும்  மேம்பாட்டிற்கும் உதவும் வகையில் 2018ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் தமிழ்ப்பள்ளிகளுக்கு 50 லட்சம் வெள்ளியை ஒதுக்கீடு செய்துள்ளது.

மத, இன வேறுபாடின்றி ஆலயங்களின் செயல்பாட்டுக்கு 17 லட்சம் வெள்ளி, இந்தியர் சிறு தொழில் முனைவர் திட்டத்திற்கு 30 லட்சம் வெள்ளி, தோட்டப்பாட்டாளிகளுக்கு 5 லட்சம் வெள்ளி, இலவச பேருந்து கட்டணத்திற்கு 13 லட்சம் வெள்ளி உட்பட சீக்கிய சமுதாயத்திற்கு 10 லட்சம் வெள்ளியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என கோத்தா அலாம் ஷா சட்டமன்ற உறுப்பினருமான்  கணபதி ராவ் தெரிவித்தார்

இது மட்டுமல்லாது, மாநில மக்களின் மருத்துவ  செலவீனங்களை குறைப்பதற்கு 'பெடுலி சிஹாட்' மருத்துவ அட்டை திட்டத்தில் 500 வெள்ளி ஒதுக்கீடு செய்யப்பட்ட வேளையில் வரும் 2018ஆம் ஆண்டு பட்ஜெட்டில் அதன் தொகை 200 வெள்ளி அதிகரித்து 700 வெள்ளியாக மாநில அரசு உயர்த்தியது.

இப்படி பட்டியலிட்டுக் கொண்டே போகும்  மாநில அரசின் மக்கள் நலத் திட்டங்களால் பயனடைந்து வரும் சிலாங்கூர் மக்கள் இம்மாநில ஆட்சியை ஒருபோதும் தேசிய முன்னணி அரசாங்கத்திடம் கொடுத்து விடமாட்டார்கள்.

பல்வேறு விவகாரங்களில் தேசிய முன்னணி அரசாங்கத்தின் மீது அதிருப்தி அடைந்துள்ள மக்கள், வரும் 14ஆவது பொதுத் தேர்தலிலும் அதனை வெளிப்படுத்துவர். ஆதலால், சிலாங்கூர் மாநிலத்தை கைப்பற்றும் தேசிய முன்னணியின் எண்ணம் ஒருபோதும் நிறைவேறாது என்றார் அவர்.

No comments:

Post a Comment