ரா.தங்கமணி
சுங்கை சிப்புட்-
மஇகாவின் முன்னாள் உதவித் தலைவர் டத்தோ எஸ்.சோதிநாதன் சுங்கை சிப்புட் நாடாளுமன்றத் தொகுதியில் வேட்பாளராக களமிறங்கக்கூடும் என பரபரப்பான தகவல் இங்கு உலாவிக் கொண்டிருக்கின்றது.
வரும் 14ஆவது பொதுத் தேர்தலில் சுங்கை சிப்புட் நாடாளுமன்றத் தொகுதியில் வேட்பாளராக களமிறங்குபவர் யார்? என்ற கேள்வி விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில் தற்போது புதிய தகவலாக டத்தோ சோதிநாதன் பெயர் உலாவுகின்றது.
இத்தொகுதியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த மஇகாவின் முன்னாள் தேசியத் தலைவர் துன் ச.சாமிவேலுவுடன் நெருக்கமானவராக திகழ்ந்த டத்தோ சோதிநாதன், முன்னாள் துணை அமைச்சராகவும் பதவி வகித்தவராவார்.
13ஆவது பொதுத் தேர்தலுக்குப் பின்னர் மஇகாவில் நிலவிய உட்பூசலினால் மஇகாவின் முன்னாள் தேசியத் தலைவர் டத்தோஶ்ரீ ஜி.பழனிவேல் அணியில் இருந்ததால் கட்சியிலிருந்து நீக்கப்பட்டார்.
மஇகாவின் தலைவராக பதவியேற்றப் பின்னர் டத்தோஶ்ரீ சுப்பிரமணியம் மேற்கொண்ட நடவடிக்கையினால் சுப்ரா அணியில் இணைந்து கொண்ட டத்தோ சோதிநாதனும் வரும் தேர்தலில் போட்டியிட வாய்ப்பளிக்கப்பட வேண்டும் என அவரின் ஆதரவாளர்கள் எதிர்பார்க்கின்றனர்.
அவ்வகையில் துன் சாமிவேலுவுடன் இருந்த காரணத்தினால் சுங்கை சிப்புட் மக்களுக்கு நன்கு அறிமுகமான டத்தோ சோதிநாதன் இத்தொகுதியில் வேட்பாளராக களமிறக்கப்படுவதற்கு வாய்ப்புகள் பிரகாசமாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
No comments:
Post a Comment