ரா.தங்கமணி
ஈப்போ-
மலேசியாவில் தற்போது நிலவும் பொருளாதார வீழ்ச்சியின் காரணமாக பல தொழில் நிறுவனங்கள் மூடுவிழா காணும் வேளையில் இது தொழிலாளர் வர்க்கத்திற்கு மிகப் பெரிய சோதனை காலமாக அமைந்துள்ளது என சுங்காய் சட்டமன்ற உறுப்பினர் அ.சிவநேசன் கூறினார்.
அண்மைய காலமாக நிதி நெருக்கடியை நாடு எதிர்நோக்கியதால் பல தொழிலாளர்கள் வேலை வாய்ப்பை இழந்தனர். அதன் தாக்கம் பல தொழில் நிறுவனங்களில் எதிரொலிக்க தொடங்கியுள்ளதால் நாட்டிலுள்ள தொழிலாளர் வர்க்கம் மிகவும் பாதிக்கப்படும் அபாயச் சூழலை எதிர்கொண்டுள்ளது.
நிதி நெருக்கடிக்கு ஆளானதால் மாஸ் நிறுவனம் தனது 6 ஆயிரம் பணியாளர்களை வேலை நீக்கம் செய்தது. அதேபோன்று பல தொழில் நிறுவனங்கள் தங்களது பணியாளர்களை வேலை நீக்கம் செய்யும் நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றன.
இன்னும் சில நிறுவனங்கள் இந்நாட்டிலுள்ள தங்களது தொழில்கூடங்களை மூடிவிட்டு பிற நாடுகளில் தொடங்குவதற்கு மும்முரம் காட்டி வருகின்றன. அதில் ஒன்றாகத்தான் ஜெயன்ட் பேரங்காடி தனது கிளை நிறுவனங்களை மூடும் நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.
இந்நாட்டில் வணிகம் மேற்கொள்வதற்கான கால ஒப்பந்தம் நிறைவடைந்துள்ளதால் நிறுவனங்களை மூடுகிறோம் என சம்பந்தப்பட்ட நிறுவனம் கூறியுள்ள போதிலும் வெகுவாக பாதிக்கப்படுவது தொழிலாளர் வர்க்கமே ஆகும்.
நாட்டின் தற்போதைய சூழல் தொடர்கதையாகினால் 16 மில்லயன் பேர் உள்ள தொழிலாளர் வர்க்கம் பெரிதும் பாதிக்கப்படும். இந்த சூழல் தொடர்கதையாகக்கூடாது என்றால் நாட்டின் அரசியல் மாற்றத்திற்கு தொழிலாளர் வர்க்கத்தினர் தயாராக வேண்டும்.
ஆளும் தேசிய முன்னணி அரசாங்கம் தொழில் நிறுவனங்கள் மீது விதித்திருக்கும் கட்டுப்பாடுகளும் வரி விதிப்புகளும் தொழில் நிறுவனங்கள் பிற நாடுகளுக்கு மாற்றலாகி செல்லும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன.
நாட்டிலுள்ள 14 மில்லியன் வாக்காளர்களில் பெரும்பாலானவர்கள் தொழிலாளர் வர்க்கத்தினரே. தங்களது வாழ்வாதாரம் நிலைபெற வேண்டுமானால் நாட்டில் அரசியல் மாற்றத்திற்கு தயாராக வேண்டும்.
மாற்றுக் கட்சியான பக்காத்தான் ஹராப்பான் நாட்டின் ஆட்சியை கைப்பற்றுவதற்கு தொழிலாளர் வர்க்கத்தினர் முழு ஆதரவு வழங்க வேண்டும். ஆளும் தேசிய முன்னணிக்கு எதிராக தொழிலாளர் வர்க்கத்தினர் அணிதிரள வேண்டும். அப்போதுதான் தொழிலாளர்கள் தங்களது வாழ்க்கையை சிறப்பாக அமைத்துக் கொள்ள முடியும் வழக்கறிஞருமான சிவநேசன் குறிப்பிட்டார்.
No comments:
Post a Comment