நேர்காணல்: ரா.தங்கமணி
சமூக ஊடகங்களில் உலா வரும் தகவல்கள் அனைத்தும் உண்மையானவை என நம்பிட முடியாது. ஆளும் அரசாங்கத்தை கவிழ்த்திட எதிர்க்கட்சியினர் பல்வேறு பொய்யான தகவல்களையும் குற்றச்சாட்டுகளையும் முன்வைக்கலாம். ஆனால் அதையெல்லாம் நம்பி தங்களது எதிர்காலத்தை இளைஞர்கள் அடகு வைத்து விடக்கூடாது என சுங்கை சிப்புட் மஇகா தொகுதித் தலைவர் இளங்கோவன் முத்து தெரிவித்தார்.
'பாரதம்' மின்னியல் ஊடகம் அவருடன் நடத்திய சிறு நேர்காணலின் மூன்றாவது தொகுப்பு இங்கே:
கே: இத்தொகுதியிலுள்ள தமிழ்ப்பள்ளி விவகாரங்கள் குறித்து?
ப: இத்தொகுதியில் உள்ள தமிழ்ப்பள்ளி விவகாரங்களுக்கு உரிய முறையில் தீர்வு காணப்பட்டு வருகிறது. ஹீவூட் தமிழ்ப்பள்ளியின் புதிய கட்டடத்திற்கான அடிக்கல் நாட்டப்பட்டு கட்டடப் பணி மேற்கொள்ளப்படுகிறது.
டோவன்பி தமிழ்ப்பள்ளிக்கான குத்தகை ஆணை வெளியிடப்பட்டுள்ளது. அந்த பள்ளியின் புதிய கட்டடப் பணி விரைவில் தொடங்கப்படலாம். சாலாக் தமிழ்ப்பள்ளிக்கான நிலம் அடையாளம் காணப்பட்டு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது, பிரதமர் டத்தோஶ்ரீ நஜிப் துன் ரசாக் அறிவித்த 2018ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டில் சாலாக் தோட்டத் தமிழ்ப்பள்ளியும் உள்ளடக்கப்பட்டுள்ளது.
கே: தேர்தல் நடவடிக்கையை தொகுதி மஇகா தொடங்கி விட்டதா?
ப: தேர்தல் நடவடிக்கை தொடங்கப்பட்டு விட்டது. வாக்காளரின் நிலையை ஆராய்ந்து கொண்டிருக்கிறோம். ஆய்வின் முடிவுக்கேற்ப வாக்கு வங்கியை அதிகப்படுத்து மக்களின் ஆதரவை அதிகரித்துக் கொண்டிருக்கிறோம்.
கே: இளம் வாக்காளர்களுக்கு என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?
ப: வரும் பொதுத் தேர்தலில் வெற்றி, தோல்வியை தீர்மானிப்பது இளம் வாக்காளர்களே ஆவர். எதிர்க்கட்சியினர் வெற்றி பெறுவதால் எவ்வித நன்மையும் கிடைக்கப்போவதில்லை. இதற்கு கடந்த 9 ஆண்டுகால ஆட்சியே உதாரணமாகும். இந்த காலகட்டங்களில் இத்தொகுதி மக்கள் சந்தித்த துயரங்கள் கொஞ்சநஞ்சமல்ல.
சமூக ஊடகங்ளில் வெளிவரும் பல்வேறு தகவல்கள் உண்மையில்லாதவையாகும். ஆதலால் உண்மை எது, பொய் எது என்பதை தீர ஆராய்ந்து இளம் வாக்காளர்கள் தங்களது வாக்குகளை செலுத்த வேண்டும்.
-முற்றும்-
No comments:
Post a Comment