Tuesday, 10 October 2017

பூவன்னா மறைவு; தமிழ் எழுத்துலகிற்கு பேரிழப்பு

ரா.தங்கமணி

சுங்கை சிப்புட்-
 நாட்டின் மூத்த எழுத்தாளர் பூ.அருணாசலம் அவர்களின் நினைவேந்தல் பிரார்த்தனைக் கூட்டம் இங்குள்ள மகாத்மா காந்தி கலாசாலை அரேனா மண்டபத்தில் நடைபெற்றது.
அண்மையில் மரணமடைந்த அமரர் அருணாசலத்திற்கு நினைவேந்தல் பிரார்த்தனைக் கூட்டத்திற்கு தோபுவான் டத்தின்ஶ்ரீ இந்திராணி சாமிவேலு தலைமையேற்று குத்துவிளக்கேற்றி நிகழ்வை தொடக்கி வைத்தார்.
இந்நிகவிழ்வில் உரையாற்றிய அவர், அமரர் பூ.அருணாசலம் ஒரு மிகச் சிறந்த எழுத்தாளர். அவரின் இழப்பு மலேசிய தமிழ் எழுத்துலகிற்கு ஏற்பட்ட மிகப் பெரிய வெற்றிடம் ஆகும்.
நாம் வாழ்ந்தோம் என்பதற்கான அடையாளமே நாம் இல்லாதபோது நமக்காக பிறர் வருத்தப்படுவதுதான். அந்த வகையில் பூவன்னா அவர்கள் தனது வாழ்நாளில் சிறப்பான வாழ்க்கையை வாழ்ந்துள்ளார். அவர் சாகா வரம் பெற்றவர் ஆவார். ஆலயம், எழுத்துத் துறை, பொதுச் சேவை என பலவற்றில் அவர் அளப்பரிய சேவைகளை வழங்கியுள்ளார்.
துன் வீ.தி.சம்பந்தனின்  குடும்ப நண்பராக விளங்கிய பூவன்னா, அவரின் மறைவுக்குப் பின்னர் விசுவாசியாக மாறி, பிறந்தநாள், நினைவுநாள் பிரார்த்தனைக் கூட்டங்களை ஏற்பாடு செய்து வந்தார்.
இன்றைய இளம் தலைமுறையினர் துன் சம்பந்தனின் வரலாற்றை நினைவு கூர்வதற்கு பூ.அருணாசலம் அவர்களின் ஆக்கப்பூர்வ நடவடிக்கைகளே காரணம் ஆகும். பல்வேறு கட்டுரைகளை எழுதி நாளிதழ், தகவல் ஊடகங்களில் இடம்பெறச் செய்ததன் வாயிலாக துன் சம்பந்தன் வரலாற்றை இன்றைய இளம் தலைமுறையினர் அறிந்து கொண்டனர்.

சுங்கை சிப்புட் நகரிம் வரலாற்று பெட்டகமாக திகழ்ந்த பூவன்னாவின் மறைவு ஈடு செய்ய முடியாதது ஆகும். அவரின் மறைவால் தமிழ் எழுத்துலகில் வெற்றிடம் ஏற்பட்டுள்ளது. அவரின் இடத்தை யாராலும் நிரப்ப முடியாது என தோபுவான் இந்திராணி சாமிவேலு கூறினார்.
சுங்கை சிப்புட் சாய் பாபா குழுவினரின் பஜனை நிகழ்வுடன் பூ.அருணாசலத்தின் உருவப் படத்திற்கு மலர் அஞ்சலி செலுத்தும் நிகழ்வு நடைபெற்றது. 'மக்கள் ஓசை' நாளிதழ் ஈப்போ வட்டார நிருபர் எம்.ஏ.அலி நிகழ்வை தொகுத்து வழங்கினார்.

இந்த நினைவேந்தல் பிரார்த்தனை நிகழ்வில் சுங்கை சிப்புட் நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் மைக்கல், ஜெயகுமார், சுங்காய் சட்டமன்ற உறுப்பினர் அ.சிவநேசன், ஜாலோங் சட்டமன்ற உறுப்பினர் லோ, முன்னாள் செனட்டர் டத்தோ என்.மாரிமுத்து,  சுங்கை சிப்புட் மஇகா தலைவர் எம்.இளங்கோ, துணைத் தலைவர் அஜாட் கமாலுடின், செயலாளர் கி.மணிமாறன், தொகுதி மஇகா முன்னாள் தலைவர் ஆர்.கணேசன், சுங்கை சிப்புட் ஜசெக தலைவர் ஹெலன், சுங்கை சிப்புட்  மஇகா மகளிர் பிரிவுத் தலைவி விஜயகுமாரி, பூவன்னாவின் நண்பர்கள், குடும்ப உறுப்பினர்கள் உட்பட பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment