Saturday, 21 October 2017

'மெர்சல்' சர்ச்சை: பலமா? பலவீனமா?

மிஸ்டர் ஜே

சென்னை-
'தரமான மருத்துவம்; அனைவருக்கும் இலவசம்' என்ற ஒற்றை கோட்பாட்டை உள்ளடக்கி வெளிவந்துள்ள 'மெர்சல்' திரைப்படம் ரசிகர்களிடம் ஏகோபித்த வரவேற்பை பெற்றுள்ள நிலையில் இந்திய அரசியலில் பெரும் சர்ச்சையையும் ஏற்படுத்தியுள்ளது.

இயக்குனர் அட்லீயின் இயக்கத்தின்  நடிகர் விஜய், நடிகைகள் சமந்தா, காஜல் அகர்வால், நித்யா மேனன், சத்யராஜ், எஸ்.ஜே.சூர்யா, வடிவேலு, கோவை சரளா உட்பட பலர் நடிப்பில் தீபாவளிக்கு திரையீடு கண்டது 'மெர்சல்' திரைப்படம்.

மருத்துவத் துறையில் நிறைந்துள்ள ஊழலையும் கார்ப்பரேட் நிறுவனங்களின் தில்லு  முல்லு வேலைகளையும் வெளிச்சம் போட்டு காட்டியுள்ள 'மெர்சல்' திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள சில வசனங்கள் இந்திய அரசியலையே ஆட்டம் காணச் செய்துள்ளது.
ADVERTISEMENT

டிஜிட்டல் இந்தியா, ஜிஎஸ்டி வரி விதிப்பு போன்ற ஆளும் பாஜக அரசின் நடவடிக்கைகளை விமர்சித்து இடம்பெற்றுள்ள வசனங்களை ரசிகர்கள் கைதட்டி ரசித்தாலும் ஆளும் பாஜக கட்சியைச் சேர்ந்த தமிழக தலைவர்கள் இத்திரைப்படத்திற்கு எதிராக குரலெழுப்ப தொடங்கியுள்ளனர்.

இத்திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள ஜிஎஸ்டி வரி விதிப்பு குறித்து நடிகர் விஜய் பேசும் வசனம் ஆளும் பாஜக அரசை விமர்சிப்பதாகவே அமைந்துள்ளது.
'7 விழுக்காடு ஜிஎஸ்டி வசூலிக்கும் சிங்கப்பூர் மக்களுக்கு இலவச மருத்துவம் வழங்கும்போது 28 விழுக்காடு ஜிஎஸ்டி வசூலிக்கிற நம்ம நாட்டுல மருத்துவத்த இலவசமா வழங்க முடியாதா?'

கொள்ளையிட வரும் கொள்ளையர்களிடம் தனது பணப்பையை கொடுப்பார் வடிவேலு. அதை திறக்கும்போது பணம் இல்லாத சுட்டிக் காட்டும் விதமாக 'இந்தியாவில் எல்லாமே டிஜிட்டல் தான்' என சொல்லி 'டிஜிட்டல் இந்தியாவை' விமர்சிப்பது போன்ற காட்சி இடம்பெற்றிருக்கும்.
ADVERTISEMENT

இந்நிலையில் இத்திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள சர்ச்சைக்குரிய வசனங்கள் நீக்கப்படும் என பட தயாரிப்பாளர் தரப்பில் கூறப்பட்டுள்ளதாக தகவல் வந்தாலும் ஆளும் பாஜக அரசை சேர்ந்த தலைவர்களை விமர்சிக்கும் பணியை சமூக ஊடக பயனர்கள் சலிப்பில்லாமல் செய்து வருகின்றனர்.

மருத்துவத் துறையில் சூழ்ந்திருக்கும் கார்ப்பரேட் நிறுவனத்தின் சதிராட்டங்களை வெளிச்சம் போட்டு காட்டியுள்ள 'மெர்சல்' திரைப்படம் மூலம் மக்கள் விழிப்புணர்வு அடைவார்களா? என்பதே மிகப் பெரிய கேள்விக்குறியாகும்.
ஓர் இக்கட்டான கதைகளத்தை மையமாகக் கொண்டு 'மெர்சல்' திரைப்படத்தில் தீபாவளி விருந்து படைத்துள்ள இயக்குனர் அட்லீயையும் நடிகர் விஜயையும் பாராட்டியே ஆக வேண்டும்.
ADVERTISEMENT

கருத்து சுதந்திரம் பரவலாக காணப்படும் இந்தியாவில், ஆளும் மத்திய அரசின் நடவடிக்கைகளை விமர்சிக்கும் விதமாக வசனங்கள் இடம்பெற்றுள்ள 'மெர்சல்' திரைப்படம், நடிகர் விஜய்க்கு எதிராக கிளம்பியுள்ள எதிர்ப்புகள் நடிகர் விஜயின் திரை பயணத்திற்கு தடையாக உருவெடுக்குமா? ஆளும் மத்திய அரசுக்கு எதிராக மக்களை திசை திருப்புமா? 

No comments:

Post a Comment