Saturday, 7 October 2017

'மருத்துவர் கனவுடன் தர்ஷினி' - நிறைவேற்றுமா ஏம்ய்ஸ்ட்?

ரா.தங்கமணி

ஈப்போ-
அரசாங்கத் தேர்வுகளில் சிறப்பான தேர்ச்சியை பெற்றிருந்த போதிலும் மருத்துவம் பயில்வதற்கு உள்நாட்டு பல்கலைக்கழங்கள் கதவடைப்பு செய்துள்ள சம்பவம் இளம் தலைமுறையின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கியுள்ளது என பத்துகாஜா நாடாளுமன்ற உறுப்பினர் வீ.சிவகுமார் தெரிவித்தார்.

யூபிஎஸ்ஆர், பிஎம்ஆர், எஸ்பிஎம், மெட்ரிக்குலேஷன், மூவேட் போன்ற தேர்வுகளில் சிறப்பான தேர்ச்சியை பெற்றுள்ள குமாரி தர்ஷினி ரவீந்திரனின் எதிர்கால லட்சியமே மருத்துவராக வேண்டும் என்பதுதான்.

இம்மாணவி சிறுவயது முதலே மருத்துவராக  வேண்டும் என்பதை லட்சியமாக கொண்டுள்ளார். ஆனால் நாட்டிலுள்ள பல்கலைக்கழகங்களில் மருத்துவம் பயில்வதற்கு வாய்ப்பளிக்கப்படாத தர்ஷினியின் எதிர்காலமே கேள்விக்குறியாக்கப்பட்டுள்ளது.

மருத்துவம் பயில்வதற்கு இம்மாணவி விண்ணப்பித்த ஒரு பல்கலைக்கழகம், ரசாயனபொறியியல் துறையில் உயர்கல்வி பயில்வதற்கு வாய்ப்பளிக்கப்பட்ட நிலையில் அவர் அதனை நிராகரித்துள்ளார் என உள்நாட்டு நாளிதழ் வெளியிட்ட தகவலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தேர்ச்சி புள்ளிகள், புறப்பாட நடவடிக்கை என அனைத்திலும் சிறந்து விளங்கியுள்ள தர்ஷினியின் மருத்துவர் கனவு நிறைவேறுவதற்கு ஏம்ய்ஸ்ட் பல்கலைக்கழகம் தனது வாயிற்கதவை திறக்குமா? என அவர் கேள்வி எழுப்பினார்.

குமாரி தர்ஷினி மருத்துவம் பயில்வதற்கு அனைத்து கதவுகளும் மூடப்பட்டுள்ள நிலையில் தற்போது இப்போது இருக்கும் ஒரே வாய்ப்பு ஏம்ய்ஸ்ட் பல்கலைக்கழகம் மட்டுமே.

தர்ஷினியின் பெற்றோர் இருவருமே ஓர் அரசாங்க பணியாளர்கள். குடும்பத்தில் மூன்று பிள்ளைகள். மூத்த பெண் மருத்துவராக வெளிநாட்டில் பயில்கின்றார். அப்பெண்ணின் படிப்பிற்கே செலவு செய்து வரும் பெற்றோர் இன்னொரு பெண்ணின் மருத்துவர் ஆசையை நிறைவேற்ற வெளிநாட்டில் பயிலவைப்பதற்கு இயலாத சூழலில் உள்ளனர்.

ஆகவே, இந்திய சமுதாயத்தின்  கல்வி மேம்பாட்டை முன்னிறுத்தி உருவாக்கப்பட்ட ஏய்ம்ஸ்ட் பல்கலைக்கழ்ககம் தனது சமுதாய கடப்பாடாக குமாரி தர்ஷினியின் மருத்துவர் கனவு நிறைவேறுவதற்கு உபகாரச் சம்பளத்துடன் கூடிய கல்வி வாய்ப்பை வழங்க முன்வர வேண்டும். அதுதான் இம்மாணவியின் லட்சியம் நிறைவேறுவதற்கான இறுதி வாய்ப்பாகும் என பேராக் மாநில ஜசெக துணைத் தலைவருமான சிவகுமார் குறிப்பிட்டார்.

இந்திய சமுதாயத்தின் கல்வித் தரத்தை உருமாற்றுவதற்காக உருவாக்கப்பட்ட ஏம்ய்ஸ்ட் பல்கலைக்கழகம் தனது சமுதாய கடப்பாட்டை நிறைவேற்றுமா?

No comments:

Post a Comment