ரா.தங்கமணி
சுங்கை சிப்புட்-
மஇகாவின் பாரம்பரிய தொகுதியான சுங்கை சிப்புட் நாடாளுமன்றத் தொகுதிக்குட்பட்ட சங்காட் சாலாக் தோட்டத் தமிழ்ப்பள்ளியின் புதிய இடத்திற்கு மாற்றம் காணும் என்ற எதிர்பார்ப்பு இன்னமும் கேள்விக்குறியாகவே உள்ளது.
தோட்டத்தில் வேலை செய்த பெரும்பாலான மக்கள் நகரத்திற்கு இடம் மாற்றலாகிச் சென்றதன் விளைவாக பெருமளவு மாணவர் எண்ணிக்கையில் சரிவு கண்ட தமிழ்ப்பள்ளியாக சாலாக் தமிழ்ப்பள்ளி திகழ்கிறது.
இந்த பள்ளி இடம் மாற்றுவதற்கான நடவடிக்கை கடந்த பல ஆண்டுகளாக மேற்கொள்ளப்பட்டு புதிய இடத்தை அடையாளம் காணப்பட்டு அதற்கான உறுதிக் கடிதம் வழங்கப்பட்டுள்ள நிலையில் இன்னும் புதிய இடத்திற்கு பள்ளியை மாற்றுவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படாதது இங்குள்ள மக்களிடையே பெருத்த ஏமாற்றமாக உள்ளது.
2014இல் பிரதமர் துறை துணை அமைச்சராக இருக்கும் டத்தோஶ்ரீ எஸ்.கே.தேவமணி இந்த புதிய நிலத்திற்கான உறுதிக் கடிதத்தை நடப்பு தொகுதி மஇகா தலைவர் மு.இளங்கோவிடம் வழங்கியிருந்தார்.
கடந்த காலங்களில் 150க்கும் மேற்பட்ட மாணவர்களின் எண்ணிக்கையை கொண்டிருந்த இப்பள்ளியில் தற்போது 30க்கும் மேற்பட்ட மாணவர்களே பயில்கின்றனர். இத்தகைய சூழலில் பள்ளியை இடமாற்றம் செய்யாமல் இன்னமும் அமைதி காத்து வரும் கல்வி அமைச்சின் நடவடிக்கை இங்குள்ள மக்களிடையே அருதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
நாட்டின் 14ஆவது பொதுத் தேர்தல் எந்நேரத்திலும் நடைபெறலாம் என எதிர்பார்க்கப்படும் வேளையில் மஇகா இத்தொகுதியை மீட்டெடுப்பதற்கு இதுபோன்ற அடிப்படை பிரச்சினைகளுக்கு தீர்வு காண வேண்டியது அவசியமாகும். இல்லையேல் இப்பள்ளி விவகாரம் கூட மஇகாவுக்கு எதிரான 'ஏவுகணை'யாக பாய்ச்சப்படலாம்.
No comments:
Post a Comment