Wednesday, 25 October 2017

உயிரோடு இருந்தால் இனி பேனர், கட்அவுட் கிடையாது- சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

சென்னை-
பேனர், கட்அவுட்களில்  உயிரோடு இருப்பவர்களின் புகைப்படங்களை இனி பயன்படுத்தக்கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் விதித்துள்ள தடை முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

கட்டடங்கள், குடியிருப்புப் பகுதிகளில் தேவையில்லாமல் கட்அவுட், பேனர் வைக்க அனுமதி அளிக்கக்கூடாது என்ற கோரிக்கையை வலியுறுத்தி சென்னை அருகம்பாக்கத்தைச் சேர்ந்த திரிலோக்‌ஷன குமாரி மனுதாக்கல் செய்திருந்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி வைத்தியநாதன், போக்குவரத்துக்கு இடையூறாக பேனர்கள், கட் அவுட் உள்ளதா என்பதை உள்ளாட்சி அமைப்புகள் மூலம் கண்காணிக்க வேண்டும் என தலைமைச் செயலாளருக்கு உத்தரவிட்டார்.

மேலும், உயிரோடு இருப்பவர்களின் புகைப்படத்தை பேனர், கட்அவுட்களில் பயன்படுத்த தடை விதித்து அதிரடி உத்தரவை பிறப்பித்தார்.

1959ஆம் ஆண்டு போக்குவரத்துச் சட்டத்தை காலச் சூழலுக்கு ஏற்ப அவ்வப்போது திருத்தவும் தலைமைச் செயலாளருக்கு அவர் உத்தரவிட்டார்.  இது தொடர்பாக தமிழகம் முழுவதும் சுற்றறிக்கை அனுப்ப தமிழக அரசுக்கு நீதிபதி உத்தரவிட்டார்.

அரசியல் கட்சித் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் என பலருக்கும் பேனர், கட்அவுட் வைக்கப்படுகின்ற சூழலில் இந்த உத்தரவு அது முக்கியத்துவம் பெறுகிறது.

No comments:

Post a Comment