Wednesday, 11 October 2017

பக்காத்தானின் கனவு பலிக்காது; தேமு வெற்றியை உறுதி செய்வோம்- எஸ்.கே.ராவ்

ரா.தங்கமணி
தஞ்சோங் மாலிம்-
வரும் 14ஆவது பொதுத் தேர்தலில் தேசிய முன்னணியின் வெற்றியை உறுதி செய்வோம் என்ற மலேசிய மக்கள் சக்தி கட்சியின் பேச்சு வெறும் சொல் அல்ல; செயலாக்கம் என அக்கட்சியின் முஹாலிம் தொகுதித் தலைவர் எஸ்.கே.ராவ் குறிப்பிட்டார்.

தேசிய முன்னணியின் தோழமைக் கட்சியாக உள்ள மலேசிய மக்கள் சக்தி கட்சி பல சேவைகளை மேற்கொண்டு மக்களுக்கு தேவையான உதவிகளை வழங்கி வருகிறது.
நாட்டின் 14ஆவது பொதுத் தேர்தலில் புத்ராஜெயாவை கைப்பற்றி விடுவோம் என எதிர்க்கட்சியினர் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாம். ஆனால் ஒருநாளும் நிறைவேறாது. தேசிய முன்னணியே மத்திய அரசாங்கத்தை ஆளும் கட்சியாக நிலைபெற்றிருக்கும்.
இது வெறும் வார்த்தையல்ல, செயலாக்கம் ஆகும். தேசிய முன்னணியின் வெற்றியை உறுதி செய்வதற்கு ஏதுவாக மலேசிய மக்கள் சக்தி கட்சி களப்பணி ஆற்றி கொண்டிருக்கிறது.

குறிப்பாக தஞ்சோங் மாலிம் நாடாளுமன்றத் தொகுதியில் 1,500க்கும் அதிகமாக வாக்காளர்களை அடையாளம் கண்டு அவர்களை தேசிய முன்னணி ஆதரவாளர்களாக உருமாற்றியுள்ளது முஹாலிம் தொகுதி மலேசிய மக்கள் சக்தி கட்சி.
வீடு வீடாகச்  சென்று மக்களின் குறைநிறைகளை கண்டு அவர்களுக்கு தேவையான உதவிகளை வழங்கி வரும் இக்கட்சியின் செயல் நடவடிக்கைகளில் ஈர்க்கப்பட்டுள்ள மக்கள் தங்களை உறுப்பினர்களாகவும் சேர்த்துக் கொண்டுள்ளனர்.

இத்தகையதொரு சேவைகளை வழங்காமல் வெறும் அறிக்கை போர் நடத்தும் எதிர்க்கட்சியினரால் புத்ராஜெயாவை கைப்பற்றவும் முடியாது; ஆட்சியும் அமைக்க முடியாது.
தேசிய முன்னணியின் அரணாக மலேசிய மக்கள் சக்தி கட்சி திகழும் வேளையில் கட்சியின் தேசியத் தலைவர் டத்தோஶ்ரீ ஆர்.எஸ்.தனேந்திரனின் வழிகாட்டல்கள்  நிச்சயம் தேசிய முன்னணியின் வெற்றியை உறுதி செய்யும் என இங்கு பேராக் மாநில மலேசிய மக்கள் சக்தி கட்சியின் தீபாவளி கொண்டாட்ட நிகழ்வில் உரையாற்றுகையில் பேராக் மாநில மமச கட்சி பொருளாளருமான எஸ்.கே.ராவ் இவ்வாறு கூறினார்.
இந்நிகழ்வில் வசதி குறைந்தவர்களுக்கு அன்பளிப்புப் பொட்டலங்களும், மாணவர்களுக்கு மிதிவண்டியும் வழங்கப்பட்டது. அதோடும் பேராக் மாநில மமச கட்சி தொகுதித் தலைவர்களுக்கு சிறப்பு செய்யப்பட்டது.
இந்த நிகழ்வில் டத்தோஶ்ரீ ஆர்.எஸ்.தனேந்திரன், அனைத்துலக வர்த்தக, தொழில்துறை அமைச்சரும் தஞ்சோங் மாலில் நாடாளுமன்ற உறுப்பினருமான டத்தோஶ்ரீ ஒங் கா சுவான், பேராக் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மா  ஹங் சூன், சிலிம் சட்டமன்ற உறுப்பினர் டத்தோ முகமட் குஸைரி பின் அப்துல் மாலிக்,  மலேசிய மக்கள் சக்தி கட்சியின் பொதுச் செயலாளர் சுதாகரன், பேராக் மாநில மமச கட்சி துணைத் தலைவர் கோபாலகிருஷ்ணன், உதவித் தலைவர் தாஸ் அந்தோணிசாமி, தஞ்சோங் மாலிம்  ம.ம.ச.கட்சி தொகுதித் தலைவர் சுகுமாறன், விஜயகுமார் உட்பட பிற தொகுதி, மாநிலத் தலைவர்களும் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment