Wednesday, 18 October 2017

இந்தியர்களின் அடிப்படை உரிமைகளுக்கு முன்னுரிமை கொடுப்பதே உண்மையான 'தீபாவளி'

சுகுணா முனியாண்டி

பட்டவொர்த்-
இந்தியர்களின் உரிமைகளை காக்கக்கூடிய திட்டங்களுக்கு முன்னுரிமை கொடுப்பதே உண்மையான தீபாவளி கொண்டாட்டம் ஆகும் என பினாங்கு மாநில முதல்வர் லிம் குவான் எங் வலியுறுத்தினார்.

குடியுரிமையற்ற இந்திய மக்களுக்கு நீல நிற அடையாள அட்டை பெற்றுத் தந்து, முதல் தமிழ் இடைநிலைப்பள்ளிக்கு அனுமதி வழங்கி, பல்கலைக்கழகத்தில் இந்திய மாணவர்களுக்கு சிறந்த துறைகளில் படிக்க வாய்ப்பு கொடுத்து மற்றும் இந்து கோவில்களைப் பராமரிக்க ஒவ்வொரு மாநிலத்திலும் இந்து அறப்பணி வாரியத்தை அமைத்தால்தான், மலேசிய இந்திய மக்கள் தேமுவின் மலேசிய இந்தியர்களுக்கான செயல்திட்ட வரைவு பொதுத் தேர்தலுக்கான விளம்பரம் அல்ல என்பதை உணர்ந்து நம்பிக்கை கொள்வர்.

இந்தியர்களுக்கு அடையாள அட்டை கிடைக்காத நிலையில் இந்தியர்களுக்கான செயல்திட்ட வரைவைப் பற்றிப் பேசி என்ன பயன்? ஆரம்பத் தமிழ்ப்பள்ளிகளை மட்டும் நன்முறையில் பராமரிப்பதோடு தமிழ் இடைநிலைப்பள்ளியைத் தொடங்குவதற்கு  அனுமதி வழங்குவதே இந்தியர்களின் மேம்பாட்டிற்கு வழிவகுக்கும். அரபு, ஆங்கிலம் அல்லது மெண்டரின் மொழிகளைத் தொடர்பு மொழிகளாகக் கொண்ட இடைநிலைப் பள்ளிகள் இருக்கும்பொழுது, ஏன் கல்வி அமைச்சு தமிழ்
ADVERTISEMENT

இடைநிலைப்பள்ளிக்கு அனுமதி வழங்க மறுக்கிறது என்பதற்குச் சரியான காரணமில்லை. பினாங்கு மாநில அரசு இலவசமாக நிலத்தினை வழங்கத் தயாராக இருக்கும் நிலையில், மத்திய அரசு பள்ளியைக் கட்டுவதற்கு மட்டுமே செலவிட வேண்டியிருக்கும்

மேலும், பினாங்கு மாநில இந்து கோவில்களின் நிர்வாகத்தையும் தோற்றத்தையும் பராமரிப்பதில் வெற்றி கண்டுள்ள பினாங்கு இந்து அறப்பணி வாரியத்தை தீபகற்பத்தில் அமைந்துள்ள அனைத்து மாநிலங்களும் பின்பற்றி செயலாற்ற வேண்டும். பெரும்பான்மை இந்தியர்கள் பொருளாதாரப் பிரிவில் பி40க்கு கீழ் இடம் பெற்றிருக்கும் நிலையில், இந்த மேம்பாடு அனைத்து இந்தியர்களுக்கும் சரிசமமாக நன்மை பயக்கும் என நம்புகிறேன்.

அரசாங்க உயர்கல்விக் கூடங்களில் இந்திய மாணவர்களுக்குக் கூடுதலாக 700 இடங்கள் வழங்கப்படவிருக்கிறது என்னும் பிரதமர் டத்தோஶ்ரீ நஜிப் துன் ரசாக்கின் அறிவிப்பு தீபாவளி அன்பளிப்பு எனத் தேசிய முன்னணித் தலைவர்கள்  அண்மையில் தெரிவித்திருந்தனர்.

ஆனால், ஒதுக்கப்பட்டிருக்கும் 700 இடங்களில் இந்திய மாணவர்களுக்கு மருத்துவம், பொறியியல், கணக்கியல், சட்டம், பல் மருத்துவம் போன்ற சிறந்த துறைகளிலும் இடம் கிடைத்து, தமிழ் இடைநிலைப் பள்ளிக்கு அனுமதி வழங்கப்பட்டு, இந்து அறப்பணி வாரியம் அமைக்கப்பட்டு இறுதியாக அடையாள அட்டைகள் கிடைத்தால் மட்டுமே அது தீபாவளி அன்பளிப்பாக கருதப்படும்

தீப ஒளியின் விடியலில் இவை அனைத்தும் நிறைவேற ஒற்றுமையாகச் செயல்படுவோம். இனிய தீபாவளி நல்வாழ்த்துகள் என ஜசெக பொதுச் செயலாளருமான லிம் குவான் எங் தெரிவித்தார்.

No comments:

Post a Comment