Sunday, 15 October 2017

இந்தியர்களிடையே ஒற்றுமை நிலைநாட்டப்பட வேண்டும்; அதுவே நமது பலம்- டத்தோ சிவராஜ்

ரா.தங்கமணி

ஈப்போ-
இந்நாட்டிலுள்ள இந்தியர்கள் அனைவரும் கொண்டாடி மகிழும் தீபாவளி திருநாளில் ஒற்றுமை நிலைபெற்றிருக்க வேண்டும். அதுதான் நமது சமுதாயத்தை அடுத்த நிலைக்குக் கொண்டு செல்லும் என மஇகா தேசிய இளைஞர் பிரிவுத் தலைவர் டத்தோ சி.சிவராஜ் குறிப்பிட்டார்.

தீபாவளி திருநாள் என்பது அனைவரிடத்திலும் மகிழ்ச்சியை ததும்ப செய்வது ஆகும். ஆனால் சில மனமாச்சரியங்கள் பிரிவு ஏற்பட்டு சங்கடமான சூழலில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். அந்த நிலை மாற்றம் காண வேண்டும்.

நாட்டின் தற்போதைய சூழலில் நாம் அனைவரும் ஒற்றுமையாக இருந்தால் மட்டுமே சாதனை புரிய முடியும். அவ்வகையில் நாம் ஒற்றுமையை புலப்படுத்த முடியும்.
அதே வேளையில் ஆளும் அரசாங்கமான தேசிய முன்னணி, மக்களுடன் தங்களை இணைத்துக் கொள்வதில் தீவிரமாக களகிறங்கியுள்ளது.  மக்களுடன் இணைந்து செயலாற்றுவதன் மூலம் அவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் கண்டறியப்பட்டு அதனை களைய  முடியும் என நேற்று இங்கு லிட்டில் இந்தியா வளாகத்தில் பேராக் மஇகா இளைஞர் பிரிவு ஏற்பாட்டில் நடைபெற்ற தீபாவளி கலை நிகழ்வில் உரையாற்றியபோது டத்தோ சிவராஜ் இவ்வாறு கூறினார்.

மக்களின் தேவைகளை பூர்த்தி செய்யக்கூடிய அரசாங்கமான தேசிய முன்னணி, பல்வேறு நலத் திட்டங்களை மக்களுக்காக  முன்னெடுத்துள்ளது. குறிப்பாக பி40 பிரிவு மக்களுக்கான நலத் திட்டங்களை செயல்படுத்துவதில் தேசிய முன்னணி  களமிறங்கியுள்ளது. அவ்வகையில் மக்களின் ஆதரவும் தேசிய முன்னணிக்கு தொடரப்பட வேண்டும்; அப்போதுதான் திட்டங்கள் யாவும் செயலாக்கம் காண முடியும் என அவர் தெரிவித்தார்.
மேலும், இந்நிகழ்வில் பேசிய மாநில மந்திரி பெசார் டத்தோஶ்ரீ ஸம்ரியின் சிறப்பு அதிகாரி டத்தோ ஷாலிமின், இந்த தீபாவளி கொண்டாட்டம் ஒரு குதூகலமான சூழலை வெளிபடுத்துகிறது என்றார்.

இளையவர்கள் முதல் பெரியவர்கள் என அனைவரும் ஒன்று திரண்டு இந்நிகழ்ச்சி ஆதரவளிப்பதும் இங்கு வர்த்தகம் புரிவோருக்கு ஆதரவுக்கரம் நீட்டுவதும் ஆக்கப்பூர்வமானதாகும்.

பல இன மக்கள் வாழ்கின்ற இந்நாட்டில் அனைத்து இன மக்களின் கலை,கலாச்சார, பண்பாட்டு நிகழ்வுக்கு தேசிய முன்னணி அரசாங்கம் என்றுமே ஒத்துழைப்பு நல்கி வருவதோடு அவர்களின் உரிமைகளும் காக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் இதுபோன்ற நிகழ்வுகள் மக்களிடையேயான ஒரு நட்புறவை வலுப்படுத்துவதோடு அவர்களின் கலை,கலாச்சாரங்களையும் அறிந்து கொள்ள முடிகிறது என குறிப்பிட்டார்.

இதனிடையே, இந்நிகழ்வு குறித்து கருத்துரைத்த பேராக் மாநில மஇகா இளைஞர் பிரிவுத் தலைவர் மு.நேருஜி, இளைஞர்களிடையே புரிந்துணர்வும் ஒற்றுமையும் மேலோங்க வேண்டும். அப்போதுதான் வாழ்வில் பல சாதனைகளை புரிய முடியும்.

நாம் ஒற்றுமையாக இருந்தால் மட்டுமே எதையும் சாதிக்க முடியும். அவ்வகையில் இந்த தீபாவளி திருநாளில் சந்தோஷம் பொங்க தீபாவளியை கொண்டாடுவோம் என அவர் குறிப்பிட்டார்.
இந்த நிகழ்வில் மாற்றுத் திறனாளியான எஸ்.ஜெயபாலன் (வயது 55), புந்தோங் சமூக புனர்வாழ்வு இயக்கத்தைச் சேர்ந்த எஸ்.கஸ்தூரி, சாய் ஶ்ரீ செத்தியா காசே காப்பக நிர்வாகி எஸ்.விஜயன் ஆகியோருக்கு நிதியுதவி வழங்கப்பட்டது.

இந்நிகழ்வில் மாநில மந்திரி பெசாரின் முன்னாள் ஆலோசகர் டான்ஶ்ரீ எஸ்.வீரசிங்கம், மாநில மஇகா இளைஞர் பிரிவு முன்னாள் தலைவர் வீரன், பேராக் மஇகா இளைஞர் பிரிவினர், பொது இயக்கத்தினர் உட்பட 700க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment