Saturday, 28 October 2017

கலைஞர் தொலைக்காட்சியில் பாட வெ.1,000 செலுத்தினோமா? - சுத்தப்பொய் - கலைஞர்கள் கொதிப்பு

புனிதா சுகுமாறன்

ஈப்போ-
கலைஞர் தொலைக்காட்சியில் இடம்பெறும்  'நெஞ்சம் மறப்பதில்லை' நிகழ்ச்சியில் பாட சென்ற மலேசியக் கலைஞர்களிடம்  1,000 வெள்ளி (மலேசிய ரிங்கிட்) வசூலிக்கப்பட்டதாக வெளிவந்துள்ள தகவலில் உண்மையில்லை என பேராக் மாநில இந்திய கலை, கலாச்சார வெண்ணிலா ஆர்ட்ஸ் குழுத் தலைவர் எ.லோகநாதன் குறிப்பிட்டார்.

மலேசியக் கலைஞர்களுக்கு வெளிநாடுகளில் வாய்ப்பு கிடைப்பதே அபூர்வமானது. இந்நிலையில் இதுபோன்ற உண்மைக்கு புறம்பான தகவல்களால் அத்தகைய வாய்ப்புகள் கைநழுவி செல்கின்றன.
தமிழ்நாட்டின் கலைஞர் தொலைக்காட்சியில் இடம்பெற்ற குறிப்பிட்ட நிகழ்ச்சியில் பாடுவதற்கு ஜூலை மாதமும் அக்டோபர் மாதம் கலை குழுவினர் தமிழகம் சென்று நிகழ்ச்சியை படைத்து வந்தனர்.

ஆனால், இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த ஆகாஸ் மீடியாவும் கலைஞர் தொலைக்காட்சியும் எங்களிடம் எந்தவித கட்டணத்தையும் கோரவில்லை. நிலைமை இவ்வாறு இருக்க  தமிழ் நாளிதழ் ஒன்றில் 'சம்பந்தப்பட்ட நிகழ்ச்சியில் பாட கலைஞர் தொலைக்காட்சிக்கு மலேசியக் கலைஞர்கள் 1,000 வெள்ளி செலுத்தியுள்ளனர்' என்ற தோரணையில் செய்தி வெளியிட்டது கண்டிக்கத்தக்கது ஆகும்.

சம்பந்தப்பட்ட தரப்பினரை அணுகாமல் உண்மை நிலை அறியாமல் வெளியிடப்பட்டுள்ள தவறான செய்தியால் மலேசியக் கலைஞர்களுக்கு வழங்கப்பட்டு வந்த வாய்ப்பு கைநழுவி செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.
தவறான செய்தியை வெளியிட்ட சம்பந்தப்பட்ட நிருபர், பத்திரிகை நிறுவனம் ஆகியவற்றின் மீது போலீஸ் புகார் செய்யப்பட்டுள்ளது என்பதோடு சட்ட நடவடிக்கை எடுப்பதற்கும் முனைந்துள்ளோம் என செய்தியாளர் சந்திப்பில் அவர் சொன்னார். இந்த செய்தியாளர் சந்திப்பில் கலைஞர் தொலைக்காட்சியில் பாட சென்ற கலைஞர்களும் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment