Monday, 18 September 2017

பிரதமரின் 'முக்கிய' அறிவிப்பு: ஊடகங்களுக்கு நேர விரயமே!

ரா.தங்கமணி

கோலாலம்பூர்-

'நாட்டு மக்களுக்கு முக்கிய அறிவிப்பு வெளியிடப்போகிறார்' என்ற பிரதமர் டத்தோஶ்ரீ நஜிப் துன் ரசாக் மீதான எதிர்பார்ப்பு ஊடகங்களுக்கு பெருத்த ஏமாற்றத்தையும் நேர விரயத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

'பிரதமர் நஜிப் இன்று 4.45  மணியளவில் செய்தியாளர்களைச் சந்திக்கிறார்; அதில் முக்கிய அறிவிப்பு செய்யவிருக்கின்றார்' என்ற தகவல் சமூக வலைதளங்களில் மட்டுமல்லாது மின்னியல் ஊடகங்களிலும் பெரும் பரபரப்பாக பகிரப்பட்டு வந்தது.

ஆனால் இந்த பரபரப்புகளை தவிடுபொடியாக்கும் வகையில் அமைந்தது இன்று நடந்த செய்தியாளர் சந்திப்பு. அம்னோவின் முன்னாள் உதவித் தலைவரும் சிலாங்கூர் மாநில முன்னாள் மந்திரி பெசாருமான டான்ஶ்ரீ முகமட் தாய்ப் மீண்டும் அம்னோவில் இணைந்துள்ளார் என்ற பிரதமர் நஜிப்பின் அறிவிப்பு அத்தனை ஆருடங்களையும் பரபரப்புகளையும் தவிடுப்பொடியாக்கியுள்ளது.

பிரதமர் டத்தோஶ்ரீ நஜிப்பின் அறிவிப்பு 14ஆவது பொதுத் தேர்தல், பிரதமர் பதவி ஆகியவற்றை உள்ளடக்கியதாக இருக்கலாம் என எதிர்பார்க்கப்பட்ட வேளையில், டான்ஶ்ரீ முகம்மட் தாய்ப் அம்னோவில் இணைந்துள்ளார் என்ற செய்தி ஒட்டுமொத்த மக்களுக்கும் கிடைத்த பேரதிர்ச்சியாகும்.

பிரதமர் டத்தோஶ்ரீ  நஜிப்பின் அறிவிப்புக்காக மக்கள் காத்துக் கிடந்ததை விட ஊடகத்தினரே பெருமளவு எதிர்பார்ப்பை கொண்டிருந்தனர். ஆனால் அவரின் இந்த 'அதிரடியான' அறிவிப்பு ஊடகத்தினருக்கு நேர விரயத்தையே கொடுத்துள்ளது.

No comments:

Post a Comment