Wednesday, 13 September 2017

சுகாதார அமைச்சின் முதல்நிலை ஊடக விருதை வென்றது 'மெளன விழிகள்'

கோலாலம்பூர்-
சுகாதார அமைச்சின்  ஊடக விருதளிப்பு நிகழ்வில் தமிழ் நேசன் நாளேட்டின் துணை ஆசிரியர் தா.சரளாதேவி  முதல் பரிசை தட்டிச் சென்றார்.

ஆட்டிஸம் பாதிக்கப்பட்ட சிறார்களின் நிலை, அவர்களை கண் இமைப்போல் பாதுகாத்து வரும் பெற்றோர் எதிர்நோக்கும் சவால்கள் ஆகியவற்றை மையமாகக் கொண்டு எழுதிய 'மெளன விழிகள்' என்ற கட்டுரைக்காக திருமதி சரளா தேவி இந்த முதல் பரிசை வென்றார்.

தலைநகர் சன்வே புத்ரா ஹோட்டலில் நடைபெற்ற சுகாதார அமைச்சின் 11ஆவது ஊடக விருதளிப்பு நிகழ்வில் சுகாதார துணையமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர் ஹில்மி யாயாவிடமிருந்து  3,000 வெள்ளிக்கான மாதிரி காசோலையும் சான்றிதழையும் பெற்றுக் கொண்டார்.

மேலும், மாரடைப்புக்கான முக்கியக் காரணம்,  அதனைத் தடுப்பதற்கான வழிமுறைகள்  குறித்து கட்டுரை எழுதிய நேசன் நாளிதழின் ஆசிரியர் கே.பத்மநாபன்  மற்றொரு விருதை தட்டிச் சென்றார்.  இவர் ஏற்கெனவே இருமுறை சுகாதார அமைச்சின் சிறந்த பத்திரிகையாளர் விருது பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிகழ்வில் உரையாற்றிய டத்தோஶ்ரீ டாக்டர் ஹில்மி யாஹ்யா,  மக்களிடையே சுகாதாரம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதில் தகவல் ஊடகங்கள் முக்கிய பங்காற்றுகின்றன. தங்களின் உடல் நிலையைப் பாதுகாக்க வேண்டிய அவசியம் குறித்து மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்துவதில் சுகாதார அமைச்சோடு இணைந்து பணியாற்றுவதில் தகவல் ஊடகங்கள் பெரும் பங்கை ஆற்றுகின்றன  என குறிப்பிட்டார்.

இந்நிகழ்ச்சியில் அமைச்சின் தலைமை இயக்குநர் டத்தோ டாக்டர் நோர் இஷாம் அப்துல்லா மற்றும் தலைமைச் செயலாளர் டத்தோஸ்ரீ டாக்டர் சென் சாவ் மின் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment