ரா.தங்கமணி
கோலாலம்பூர்-
மஇகா 71ஆவது பொதுப் பேரவை பல்வேறு சீர்த்திருத்தங்களை உள்ளடக்கியதாகவே தெரிகிறது. டத்தோஶ்ரீ டாக்டர் எஸ்.சுப்பிரமணியம் தலைமையிலான தற்போதைய மஇகா பல உருமாற்றங்களை கண்டு வருகிறது. அவ்வகையில் இந்த 71ஆவது பேராளர் மாநாட்டில் நமது கண்களுக்கு தெரிந்த சில சீர்திருத்தங்களை கொஞ்சம் அலசுவோம்.
சீர்திருத்தம் 1: அமைப்பு சட்ட விதி மாற்றம்
* மஇகா அமைப்பு சட்ட விதிகளில் மேற்கொள்ளப்படவுள்ள மாற்றங்களின் மூலம் கிளைத் தலைவர்களுக்கும் செயலவையினருக்கும் முக்கியத்துவம் அளிக்க உறுதி செய்யப்பட்டுள்ளது. தேசியத் தலைவர், தேசிய துணைத் தலைவர், உதவித் தலைவர்கள், மத்திய செயலவை உறுப்பினர்கள் மட்டுமல்லாது, மாநில செயலவையினர் 10 பேரையும் தொகுதி ரீதியில் தலைவர், துணைத் தலைவர், இரு கணக்காய்வாளர்கள் ஆகியோரை தேர்ந்தெடுக்கும் உச்ச அதிகாரம் கிளைத் தலைவர்கள் செயலவையினருக்கு வழங்கப்பட்டுள்ளது.
சீர்திருத்தம் 2: கம்பீரம் இல்லை... ஆனால் எளிமை!
* மஇகா பேராளர் மாநாடு என்றாலே ஒரு கம்பீரம் தலைதூக்கியிருக்கும். மஇகாவின் முன்னாள் தேசியத் தலைவர் டத்தோஶ்ரீ ச.சாமிவேலு தலைமையில் நடைபெற்ற பல மாநாடுகளில் அந்த கம்பீரம் மிளிர்ந்தது. மண்டப அரங்கம் மட்டுமல்லாது பேராளர்கள் தங்கி செல்லும் ஹோட்டல் வரை அனைத்திலும் ஒரு ஆடம்பரம் தெரியும்.
ஆனால் டத்தோஶ்ரீ சுப்ரா தலைமையிலான இந்த 71ஆவது பேராளர் மாநாடு மிக எளிமையான தோற்றத்தை பிரதிபலித்தது. மாநாடு நடைபெற்ற மண்டபம் முதல் ஹோட்டல்கள், உணவு என பலவற்றில் இந்த எளிமை 'பிரதிபலித்தது'. இந்த எளிமை கூட மஇகா உருமாற்றத்தின் பிம்பமே ஆகும்.
சீர்திருத்தம் 3: தேசிய மொழியில் உரை; காணொளியில் தமிழ்மொழி
* மஇகா தேசியத் தலைவர் டத்தோஶ்ரீ எஸ்.சுப்பிரமணியம் ஆற்றிய கொள்கைவுரை முழுக்க முழுக்க தேசிய மொழியில் மட்டுமே இடம்பெற்றது. நாட்டின் தேசிய மொழி என்பதாலும் பிரதமர் வந்திருப்பதாலும் தேசிய மொழியில் உரையாற்றிய அவர், தமிழில் உரையாற்ற மறக்கவில்லை; மாறாக நேரம் குறைவு கருதி எல்இடி திரையில் தேசியத் தலைவரின் உரை காணொளி காட்சியாக இடம்பெற்றது.
சீர்திருத்தம் 4: சிறிய மாலை; பொன்னாடை இல்லை
* மஇகா மாநாட்டுக்கு வருகை புரியும் பிரதமருக்கு ஆளுயர மாலையும் பொன்னாடையும் செய்யும் கலாச்சாரம் நீடித்திருந்தது. ஆனால் இந்த 71ஆவது பேராளர் மாநாட்டில் பிரதமர் டத்தோஶ்ரீ நஜிப் துன் ரசாக்கிற்கு இலகுவான, சிறிய மாலை அணிவித்த டத்தோஶ்ரீ சுப்ரா, நினைவுச் சின்னம் ஒன்றை மட்டுமே பரிசளித்தார்.
இத்தகைய சீர்த்திருந்தங்களை முன்னெடுத்த மஇகா 71ஆவது பேராளர் மாநாடு உண்மையிலேயே ஓர் உருமாற்றத்திற்கு வித்திட்டுள்ளது எனலாம்.
No comments:
Post a Comment