சுகுணா முனியாண்டி
ஜூரு-
மத்திய செபெராங் பிறை மாவட்டத்தின் புக்கிட் மெர்தாஜம் வட்டாரத்தில், தாமான் மாங்கா குடியிருப்புப் பகுதியில் உள்ள ஸ்ரீ மகாதேவி கருமாரியம்மன் ஆலயத்தில் நடைபெற்ற அக்கினி சட்டி பிரார்த்தனையில், அலையென பக்தர்கள் திரண்டு அம்பாளை தரிசித்து பரவசமடைந்தனர்.
ஆடி வெள்ளித் திருவிழா தொடர்பில் நடந்தேறிய இந்த சிறப்புப் பிரார்த்தனை வழிபாடு வழக்கம் போலவே இம்முறையும் விமரிசையாக நடத்தப்பட்ட நிலையில், இந்த வைபவத்தில் தாமான் மாங்கா குடியிருப்புவாசிகள் மட்டுமின்றி, சுற்றுப்புறப் பகுதிகளையும் சேர்ந்த பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
அம்பாளுக்கான சிறப்பு தரிசனத்தின் உச்சக்கட்ட அங்கமாக நடத்தப்பட்ட அக்கினி சட்டி பிரார்த்தனையில் பக்தர்கள் யாவரும் பக்திப் பரவசத்தோடு 'ஓம் சக்தி ஓம் சக்தி' என பக்தியை கொணர்ந்தனர். தாமான் மாங்கா குடியிருப்பு இந்து இளைஞர்களின் தப்பாட்டம், அன்றைய தினம் சிறப்பாக மெருகேறியதும் நிலையில் அந்த வட்டராம் பக்தியில் மூழ்கியிருந்தது.
இந்த ஆலயத் திருப்பணி தொடர்பான காரியங்கள் திட்டமிட்டபடி நடைபெறுவதற்கு இந்து சமயப் பற்றாளர்கள் யாவரும் தங்களால் இயன்ற அளவில் ஆதரவும் ஒத்துழைப்பும் வழங்க வேண்டுமென்று அன்றைய தினம் பக்தர்கள் மத்தியில் ஆலயத் தலைவர் விஜயன் தங்கராஜூ கோரிக்கை விடுத்தார்.
சுற்று வட்டார இந்துக்களின் ஆதரவுக்கு மட்டுமின்றி, வெளியூர் பக்தர்களின் வருகையும் இவ்வாலயத்திற்கான நற்பெயரை மணம் பரப்புவதால், ஆலய நிர்வாகத்தினர் மனநிறைவு கொள்வதாக விஜயன் மேலும் தெரிவித்தார். இந்த ஆலய கட்டுமானப் பணி எதிர்ப்பார்த்த இலக்கை அடைவதற்கான வாய்ப்பு கிட்டி வருவதாகவும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
இந்த அக்கனி பிரார்த்தனை வழிபாட்டிற்கு ஆதரவு வழங்கிய பிரமுகர்களுக்கு ஆலயத்தின் சார்பில் காளாஞ்சி வழங்கி சிறப்பிக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment