Friday, 15 September 2017

வெளியே கல் வீடு; உள்ளே வறுமையின் கொடுமை - உதவிக்கு ஏங்கும் இந்தியக் குடும்பம்

மகேசனும் அவரின் மனைவியும்...
-புனிதா சுகுமாறன்
ஈப்போ-
"இருப்பதோ வாடகை வீடு; ஆனால் கல் வீட்டில் இருப்பதால் வசதியாக இருக்கிறோம் என நினைத்து உதவி செய்ய வரும் அரசியல்வாதிகள் கூட உதவாமலே சென்று விடும் அவலநிலையை எதிர்நோக்கியுள்ளது" ஓர் இந்தியக் குடும்பம்.

புந்தோங், தாமான் கிளேடாங் எமாஸ் பகுதியில்  'சொரியாசிஸ்' நோயால் வாடும் மகேசன், அவரின்  தாயார், 4 பிள்ளைகள் ஆகிய அனைவரும் மகேசனின் மனைவி திருமதி வேப்பிளையம்மாள் வருமானத்தை நம்பியே காலத்தை கடக்கக்கூடிய இன்னலை அனுபவிக்கின்றனர்.

தனது இந்த துயர நிலையை குறித்து விவரித்த மகேசன், கடந்த சில ஆண்டுகளாக சிங்கப்பூரில் வேலை செய்து வந்தேன். அப்போது நல்ல ஒரு சூழலில் குடும்பத்தை வழிநடத்தியதோடு வீட்டையும் வாங்கி அதற்கு பணமும் செலுத்தி வந்தேன்.
திடீரென தாக்கிய 'சொரியாசிஸ்' நோயினால் சிங்கப்பூரில் செய்து வந்த வேலையை விட வேண்டிய சூழல் ஏற்பட்டது. அதோடு வாங்கிய வீட்டுக்கு பணம் செலுத்த முடியாததால் வீடும் ஏலத்திற்கு சென்று விட்டது.

தற்போது வாடகை வீட்டில் உணவுக்கே அல்லல்படும் சூழலில் வாழ்ந்துக் கொண்டிருக்கிறோம். எங்களின் நிலையை அறிந்து உதவி செய்ய வரும் அரசியல்வாதிகள் 'நாங்கள் கல் வீட்டில் வாழ்வதால் வசதியாக இருக்கிறோம் என நினைத்து உதவிக்கரம் நீட்டாமல் சென்று விடுகின்றனர்.'
நாங்கள் கல் வீட்டில் வசித்தாலும் அது வாடகை வீடுதான். வீட்டின் உரிமையாளர் எப்போது வேண்டுமானாலும் வீட்டை அபகரித்துக் கொள்ளக்கூடிய சூழல் உள்ளது. இரு பெண் பிள்ளைகளை வைத்துக் கொண்டு பாதுகாப்பான சூழலில் வாழ வேண்டிய நிர்பந்ததையும் எதிர்நோக்கியுள்ளோம்.

இத்தகைய துயரங்களுக்கு மத்தியில் மனைவி பாதுகாவலர் வேலை செய்து கொண்டிருப்பதால் அதில் கிடைக்கும் வருமானத்தில் குடும்பத்தினரின் மொத்த தேவைகளையும் பூர்த்தி செய்ய வேண்டியுள்ளது.

3 வருடத்திற்கு முன் கீழே விழுந்ததனால் காலில் பலத்த காயம் ஏற்பட்டது. அதன் விளைவாக காலில் அறுவை சிகிச்சை செய்ததால் பல தர்ம சங்கடமான நிலையை எதிர்நோக்கினேன். அறுவை சிகிச்சையினால் நடக்க முடியாத சூழலில் உள்ளேன்.  மறுபடியும் அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய நிலை உள்ளது.
மகேசனின் தாயார்
ஒருபுறம் மனவேதனையில் சிக்கி தவிக்கின்ற சூழலில் பொருளாதார நிலை மற்றொரு போராட்டமாக அமைந்துள்ளது.  மூன்று பிள்ளைகளும் தாயாரும் வாய்க்கு ருசியான உணவை உண்ண முடியாத நிலையை பார்க்கும்போது வாழ்வதற்கே அர்த்தமில்லாத சூழலை உணர்கிறேன்.

எங்களது குடும்பம் எதிர்நோக்கும் துயரை போக்க நல்லுள்ளங்களும் அரசியல் தலைவர்களும் உதவிக்கரம் நீட்ட வேண்டும் என மகேசன் கேட்டுக் கொண்டார்.

'கல் வீட்டுக்குள் வசிப்பதால் அனைவரும் வசதி படைத்தவர்கள் அல்லர். கல்லுக்குள் ஈரம் இருப்பதை போல் கல் வீட்டுக்குள்ளும் வறுமை தலை விரித்தாடலாம் என்பதற்கு மகேசனின் வாழ்வாதாரமே அத்தாட்சியாகும். கல்லை மட்டுமே பார்த்து செல்லும் அரசியல்வாதிகள் கொஞ்சம் கண் திறந்து அந்த கல் வீட்டுக்குள் நிலவும் வறுமைக்கு தீர்வு காண முற்படுவார்களா?

தொடர்புக்கு: 010-3990094 (வேப்பிளையம்மாள்), 016-4942096 (மகேசன்)                      

No comments:

Post a Comment