சுங்கை சிப்புட்-
நாட்டின் 60ஆம் ஆண்டு சுதந்திர தினம், மலேசியா தினத்தை முன்னிட்டு சுங்கை குருடா இளைஞர் இயக்கம் 'தேசிய தினம், மலேசியா தினத்தை' சிறப்பாக கொண்டாடியது.
அண்மையில் சுங்கை சிப்புட் தேசிய முன்னணி அலுவலகத்தில் தேசிய தினக் கொண்டாட்டம் அதிகாரப்பூர்வமாக தொடங்கியது. லிந்தாங் சட்டமன்ற உறுப்பினர் டத்தோ சூல்கிப்ளி ஹாஜி ஹருண் இந்நிகழ்வை அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைத்தார்.
மருத்துவப் பரிசோதனை, ரத்த தான முகாம், மாணவர்களுக்கு வண்ணம் தீட்டும் போட்டி, ,மரக்கன்றுகள் நடவு செய்தல், சிறந்த சேவையாளர்களுக்கு அங்கீகாரம் என நடைபெற்ற இந்த விழா சுதந்திர தினத்தின் தாக்கத்தை வெளிபடுத்தியது.
இதன் தொடர்ச்சியாக மலேசியா தினத்தை முன்னிட்டு சுங்கை குருடா இளைஞர் இயக்கம் பள்ளி மாணவர்களுக்கு தேவாரப் போட்டி, இளைஞர்களுக்கு கால்பந்து போட்டி, சேவையாளர்களுக்கு சிறப்பு செய்தல் என பல்வேறு நிகழ்வுகளை நடத்தியது. சுங்கை குருடா, மீனாட்சி சுந்தரம் மண்டபத்தில் நடைபெற்றது.
இந்த நிகழ்வில் உரையாற்றிய இயக்கத்தின் ஆலோசகர் கி.மணிமாறன், மக்களிடையே தேசப்பற்று மேலோங்க வேண்டும் எனும் நோக்கில் இந்நிகழ்வு ஏற்பாடு செய்வதாகவும் பல ஆண்டுகளாக கட்சி, பொது இயக்கங்களின் வாயிலாக சேவையாற்றி வரும் சேவகர்களை சிறப்பிக்கும் நிகழ்வாகவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என கூறினார்.
மேலும் இந்நிகழ்வுக்கு தலைமையேற்ற சுங்கை சிப்புட் மஇகா தொகுதித் தலைவர் இளங்கோவன் முத்து உரையாற்றுகையில், நாட்டின் சுதந்திரம் எளிதாக கிடைத்து விடவில்லை. பல்வேறு போராட்டங்கள், இன்னல்களுக்கு மத்தியில் நமக்கு சுதந்திரம் கிடைத்தது. ஆனால் கிடைத்த சுதந்திரத்தை தவறான வழியில் பயன்படுத்தும் போக்கு நிறுத்தப்பட வேண்டும். இந்த ஜனநாயக நாட்டில் நமக்கு கிடைக்கப்பெற்றுள்ள வாய்ப்புகளை நன்கு பயன்படுத்திக் கொண்டு முன்னேற்றம் காண வேண்டுமே தவிர குறைகளையே சொல்லிக் கொண்டிருப்பதில் அர்த்தமில்லை என்றார்.
அதோடு, இந்நிகழ்வில் சிறப்பாளராக கலந்து கொண்ட சுங்கை சிப்புட் போலீஸ் படை துணைத் தலைவர் டிஎஸ்பி பரமேஸ்வரன், போலீஸ் என்றுமே மக்களுக்கு நண்பனாக இருந்து சேவையாற்றி வருகிறது. பல்வேறு சமூகச் சீர்கேடுகளை தவிர்க்க மக்கள் போலீசுடன் ஒத்துழைப்பு நல்க வேண்டும் என வலியுறுத்தினார்.
இந்த நிகழ்வில் சுங்கை குருடா தோட்டத்தில் தேசிய மொழி பயிற்றுவித்தவரும் தற்போது சுங்கை சிப்புட் தேசிய முன்னணி செயலாளருமான ஸம்ரி, தோட்டத்தில் மருத்துவ உதவியாளராக பணியாற்றிய ஸப்ரி ஆகியோர் சிறப்பிக்கப்பட்டனர்.
இந்த நிகழ்வில் தொழிலதிபர் டத்தோ டாக்டர் ஏ.கே. சக்திவேல், சுங்கை சிப்புட் மைபிபிபி தலைவர் சத்தியமூர்த்தி, சுப்பிரமணியர் ஆலயத் தலைவர் ஆர்.டி.அருணாசலம், மசீச லோ, கவுன்சிலர் லெட்சுமணன், மஇகா கிளைத் தலைவர்கள் கி.சேகரன், ஆர்.அண்ணாமலை, எஸ்,கவிமன்னன், ஆலயத் தலைவர் கி.பாண்டியன், வட்டார மக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment